மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

இஸ்லாமியர் ஓட்டு: இறங்கி வரும் எடப்பாடி

இஸ்லாமியர் ஓட்டு:  இறங்கி வரும் எடப்பாடி

தமிழகத்தில் நடக்கும் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களவை தொகுதிகளை விட, 18 சட்டமன்றத் தொகுதிகள் மீதே அதிக கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால் அவர் மீது பாஜக வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயலே இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தனது கோபத்தைத் தெரிவித்ததாகவும் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் முதல்வரோ எது பற்றியும் கவலைப்படாமல் அர்ஜுனன் பறவையின் கண்ணைக் குறிவைப்பது போல, 18 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள் அதிமுகவினர்.

என்ன அது?

“சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இருக்கும் முஸ்லிம் ஓட்டுகளைக் குறிவைத்து கடந்த ஐந்து தினங்களாக அதிமுகவின் சிறுபான்மை பிரிவுக்கு முக்கியமான அசைன்மெண்ட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் எடப்பாடி. அதன்படி பரமக்குடி, மானாமதுரை, ஆம்பூர், குடியாத்தம் உள்ளிட்ட இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு வஃக்ப் வாரிய தலைவர் எம்பி. அன்வர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் அதிமுக சிறுபான்மை பிரிவு சார்பில் ஒரு குழு அனுப்பப்பட்டிருக்கிறது.

அவர்கள் ஆம்பூர் போன்ற இஸ்லாமியர்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளுக்குச் சென்று முஸ்லிம் பெரிய மனிதர்களையும், சமுதாய முக்கியஸ்தர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறார்கள். ஹஜ் மானியத்துக்கு மத்திய அரசு நிதி உதவியை ரத்து செய்தபோது அதிமுக அரசு அதை ரத்து செய்யாமல் மாநில அரசே நிதி உதவி செய்யும் என்று அறிவித்தது, வஃக்ப் வாரியம் மூலம் செய்த உதவிகள் ஆகியவற்றைச் சொல்லி அதிமுகவுக்கு வாக்கு கேட்கிறார்கள்.

முஸ்லிம் பெரியவர்கள் பதில் சொல்வதற்கு முன்பே, ‘நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு தெரியுது. பிஜேபியோட கூட்டணி வச்சிட்டோம். அதுக்காக நீங்க கொடுக்க வேண்டிய தண்டனையை எம்பி. தேர்தலுக்குக் கொடுங்க. நாங்க ஏத்துக்குறோம். மேல நீங்க யாருக்கு வேணும்னாலும் போடுங்க. ஆனா கீழ இரட்டை இலைக்குப் போட்டுடுங்க. அதுக்காக என்ன வேணும்னாலும் செய்ய நாங்க தயாரா இருக்கோம்” என்று அதிமுக குழுவினர் முந்திக் கொண்டு சொல்கிறார்கள். அதாவது எம்பி தேர்தலுக்கு கூட எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம், சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற அளவுக்கு அதிமுகவினர் இறங்கிவந்துவிட்டனர்.

இந்த உள் பிரச்சாரத்தின் மூலம் கொஞ்சமாவது முஸ்லிம் ஓட்டுகளை அடையலாம் என்பதே அதிமுகவின் நோக்கம்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon