மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஓபிஎஸ் மீது லஞ்ச வழக்குத் தொடருவேன்: ஈவிகேஎஸ்

ஓபிஎஸ் மீது லஞ்ச வழக்குத் தொடருவேன்: ஈவிகேஎஸ்

தேனியில் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும், திமுக காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று தேனி வேட்பாளரும் தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்குத் தொடருவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு தினமே உள்ளது. இன்று மாலை 6 மணிக்குள் வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்றும் 6 மணிக்கு மேல் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது, பிரச்சாரம் செய்யக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அந்தவகையில் பிரச்சாரங்கள் முடிவடைய இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இதனால் அனைத்துக் கட்சியினரும் கொளுத்தும் வெயிலிலும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

தேனியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசுதான் இந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அரசு” என்று விமர்சித்தார். ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றாலும் அவர்களை அழைத்துப் பேசக் கூட இவர்களுக்கு தகுதியில்லை. எனவே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக காங்கிரஸ் கூட்டணியைத்தான் ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முல்லைப் பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசும்போது, தேனி பகுதி மக்கள் செழித்து வாழ்வதற்கு வழிவகை செய்த ஜான் பென்னிகுக் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் இன்று (ஏப்ரல் 16) அவருக்கு மரியாதை செய்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் ஓ பன்னீர்செல்வம் பணத்தை வாரி வழங்கிவருகிறார். அவர் எவ்வளவுதான் பணம் கொடுத்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான நான்தான் வெற்றி பெறுவேன்” எனக் குறிப்பிட்டார்.

நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம், ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்குப் போடுவதாகக் கூறியிருந்தார் அது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”இவ்விவகாரத்தை நான் இதோடு விட போவதில்லை, வீட்டுவசதி வாரியத்தில் நிலங்களை அங்கீகாரம் செய்வதில் ஓபிஎஸ் செய்யும் ஊழல்களையெல்லாம் இன்னும் சொல்ல இருக்கிறேன் அந்த ஊழலுக்கு அவர் பதில் சொல்லவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் அவர் லஞ்சம் வாங்கினார் என்று அவர் மீது தேர்தலுக்குப் பிறகு வழக்குத் தொடரவுள்ளேன்” என்று கூறியுள்ளார்

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon