மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 ஏப் 2019

வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 50 விழுக்காடு ஒப்புகைச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் அல்லது வாக்குச்சீட்டு முறைக்கே திரும்ப வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

சென்னை வந்துள்ள அவர், அண்ணா அறிவாலயத்துக்கு சென்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன், வட சென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது கடும் அதிருப்தி தெரிவித்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 16) அவர் சென்னை வந்து திமுக நிர்வாகிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆந்திராவில் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தபோது 30 முதல் 40 விழுக்காடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. 150 தொகுதிகளுக்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தெலுங்கு, தமிழ் மக்களின் உறவானது அண்ணன்- தம்பி உறவு. சென்னை மாகாணத்தில் தெலுங்கு, தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். தமிழ்நாட்டில் இப்போது ஆட்சியில் இருப்பது ஏடிஎம்கே இல்லை, மோடி எம்கே. அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்கு ஓட்டு போடுவதற்கு சமம். டெல்லியில் 100 விவசாயிகள் கையில் மண்டை ஓடுகளை வைத்து கிளர்ச்சி செய்தபோதும் மோடி கவலைப்படவில்லை. ஜந்தர் மந்தரில் விவசாயிகள் கிளர்ச்சி செய்தபோது அதைப்பார்த்தோம். ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றினாரா?

பெரியார், எம்ஜிஆர், கலைஞர் ஆகியோர் மக்களுக்கு கஷ்டம் வந்தபோது ஆதரவாக இருந்தார்கள். அதைப்பார்த்து மோடி கற்றுக்கொள்ள வேண்டும். கலைஞர் கருணாநிதி உலகம் போற்றும் தலைவர். அவருடைய வாரிசாக ஸ்டாலின் உங்கள் முன்னே இருக்கிறார். ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் நினைக்கிறார்கள்” என்று சந்திரபாபு நாயுடு தமிழில் பேசினார். தமிழ் மொழி மிகவும் அழகான மொழி, அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவரான என்னை மிகவும் ஈர்த்திருக்கிறது என்றும் அவர் அப்போது கூறினார்.

தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காகவே சென்னை வந்தேன் என்ற அவர், “ஜனநாயகம் மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அதே சமயத்தில் நரேந்திர மோடி அரசு இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்திருக்கிறது. சமூகத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சமத்துவத்தையும், நீதியையும் பெற தேர்தல் ஒரு மிகப்பெரிய ஆயுதம் என்று பி.ஆர்.அம்பேத்கர் கூறினார். வாக்கு என்னும் ஆயுதத்தை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஓட்டுப் போடுவது அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமை. ஆனால் இன்றைக்கு அம்பேத்கர் சொன்னதா நடக்கிறது” என்று கேள்வியெழுப்பினார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்துப் பேசிய அவர், ”உலகில் உள்ள 10 முக்கியமான நாடுகளில் 3 நாடுகளில் மட்டும்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் கூடுதலாக பொருத்துவது இயலாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் 5 வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்ப்பு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 50 விழுக்காடு வாக்குச்சாவடி மையங்களில் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்க வேண்டும் என்று எல்லா கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அது ஒன்றும் முடியாதது அல்ல. இல்லையென்றால் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும். வாக்குச்சீட்டு பயன்படுத்தினால் 24 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிடும். மறு எண்ணிக்கை செய்தால் கூட அதிகபட்சமாக 10 மணி நேரத்திற்குள் முடிந்துவிடும். ஓட்டு போடும்போது நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது 7 செகண்ட் வரை விவிபாட் இயந்திரத்தில் தெரிய வேண்டும். அதற்குப்பிறகு வாக்குப்பெட்டிக்குள் விழுந்துவிடும். ஆனால் இப்போது 3 செகண்ட் வரை மட்டும்தான் தெரிகிறது. தேர்தல் ஆணையம் இதை மாற்றியுள்ளதா? ஏன் மாற்றியது?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், “2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 7 மாநிலங்களில் உள்ள எல்லா வாக்குப் பதிவு இயந்திரங்களும் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மற்றும் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தகவலும் சொல்லாமல் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையும் நாங்கள் கேள்வியெழுப்புகிறோம்” என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 16 ஏப் 2019