மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

இது ஜனநாயக சக்திகளின் தர்மயுத்தம்: திருமாவளவன்

இது ஜனநாயக சக்திகளின் தர்மயுத்தம்: திருமாவளவன்

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இறுதிகட்ட பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் திருமாவளவன் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “இன்றைக்கு ஜெயங்கொண்டத்தில் பிரச்சாரத்தை முடிக்கிறோம். ஜெயங்கொண்டம் என்றால் வெற்றி கொண்டான் என்று பொருள்.

தலைவர் கலைஞர் இல்லாத இந்த சூழலில் தளபதி ஸ்டாலின் ஒரு வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கியுள்ளார். நாசகார சக்திகளின் ஆட்சிக்கு முடிவுகட்டி நரேந்திர மோடியை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றி இளம் தலைவர் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்க ஸ்டாலின் சூளுரை மேற்கொண்டுள்ளார். திருமாவளவன் இந்த தொகுதியின் எம்.பியாக வேண்டுமென்பதை விட ராகுல் காந்தி பிரதமராக வேண்டுமென்பதே திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணியின் லட்சியம். அதற்கு தமிழகத்தில் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் நாம் வென்றாக வேண்டும்; சிதம்பரத்தில் பானைச் சின்னம் வெற்றிபெற வேண்டும்.

இது நாசகார சக்திகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையே நடைபெறும் தர்ம யுத்தம். ஒருபக்கம் வியாபாரிகளின் கூட்டணி. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி நிர்ப்பந்தத்தால் உருவான கூட்டணி. இந்த கூட்டணி உருவாவதற்கு முன்பு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்தப் பாவத்தை சுமப்பது யார் என்று அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தம்பிதுரை கேள்வியெழுப்பினார். ஆனாலும் அந்தக் கூட்டணி எப்படி உருவானது? வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ சோதனை வரும் என அச்சுறுத்தி அதிமுக, பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளார்கள்.

பாமக, தேமுதிக கட்சிகள் நோட்டும், சீட்டும் எவ்வளவு என பேரம் பேசி கூட்டணியில் இணைந்தார்கள். ஆக, இது வணிகர்களின் கூட்டணி. ஸ்டாலின் தலைமையில் உருவாகியுள்ள எங்களது கூட்டணி ஒரு பரிசுத்தமான கொள்கை கூட்டணி. மோடி ஆட்சியை எதிர்த்தும், எடப்பாடி ஆட்சியை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களில் கைகோர்த்த கட்சிகள்தான் இன்றைக்கு தேர்தல் களத்திலும் கைகோர்த்து நிற்கிறோம். மீண்டும் மோடி வேண்டாம் என்பதே இந்த பரிசுத்த கூட்டணியின் லட்சியமும் இலக்கும்” என்று பேசினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon