மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

மீனவர் பாதுகாப்பை உறுதி செய்வோம்: நவாஸ் கனி

மீனவர் பாதுகாப்பை உறுதி செய்வோம்: நவாஸ் கனி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கை ராணுவத்திடம் காலையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மாலைக்குள் விடுவிக்கப்பட்டது. இன்று 2 மாதங்கள் ஆனால் கூட விடுவிக்கப்படுவதில்லை என்று ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 16) மாலை 6 மணியுடன் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், “ராமநாதபுரம் தொகுதிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தரமான கல்வி, சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வசதி என மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். ராமநாதபுரம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இத்தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகம் அமைத்து மக்களின் குறைகள் கேட்கப்படும்.

இந்த அலுவலகங்களின் மூலம் தினம்தோறும் மக்களின் குறைகளைக் கேட்டு உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸூம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளன. இரண்டு கட்சிகளின் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ள அத்தனை நல்ல வாக்குறுதிகளின் பயன்களையும் ராமநாதபுரம் மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்” என்றார்.

ராமநாதபுரம் மீனவர்களுக்கு இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும், மீனவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பேசிய அவர், “கடலுக்கு செல்கிற மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இன்று இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கை இராணுவத்திடம் காலையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மாலைக்குள் விடுவிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு 2 மாதங்கள் ஆனால் கூட மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு கண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.

மேலும், “காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருப்புப் பாதை அமைத்து ரயில்கள் இயக்கவும், ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் வலியுறுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon