மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வேலுமணி பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தடையில்லை: நீதிமன்றம்!

வேலுமணி பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தடையில்லை: நீதிமன்றம்!

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரங்கள் நிறைவடையவுள்ள நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பற்றி பிரச்சாரத்தில் பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து ஸ்டாலின் தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் ஏப்ரல் 4ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை கடுமையாக விமர்சித்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெறும் பிரச்சார கூட்டங்களிலும், உள்ளாட்சித் துறை முறைகேடுகள் குறித்தும், பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அமைச்சர் வேலுமணி பாதுகாக்க முயற்சிப்பதாகவும் ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்

எனவே, தன்னை பற்றிப் பேச ஸ்டாலினுக்குத் தடை விதிக்க கோரியும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன்,தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை தான் என்பதால் ஸ்டாலினுக்குத் தடை விதிக்க முடியாது என ஏப்ரல் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 16) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் வேலுமணி தரப்பில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் தன்னைப்பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார். எனவே அவர் தன்னை பற்றிப் பேசத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon