மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

அடிக்கிற வெயிலில் தாமரை கருகிவிடும்: கனிமொழி

அடிக்கிற வெயிலில் தாமரை கருகிவிடும்: கனிமொழி

தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 16) பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி அடிக்கிற வெயிலில் தாமரை மலராது, கருகிவிடும் என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக சார்பில் எம்.பி.கனிமொழி, அமமுக சார்பில் டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடியைப் பொறுத்தவரைக் கனிமொழி ஸ்டெர்லைட் பிரச்சனையை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிரதமர் மோடி அரசின் நடவடிக்கைகளையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வரும் கனிமொழி இறுதிகட்ட பிரச்சார நாளான இன்று காலை முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் உரையாற்றினார். திருச்செந்தூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், முத்தையா புரம், வட்ட கோவில், சுந்தரவேலு நகர், ஸ்டேட் பாங்க் காலனி எனப் பல இடங்களில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய கனிமொழி, ”பாஜக ஆட்சியில் நாட்டில் பாதுகாப்பு இல்லை. ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு பெயரில் பொருளாதாரத்தை நாசம் செய்திருக்கின்றனர். மக்கள் கஷ்டப்பட்ட போது பிரதமர் இங்கு வரவில்லை. இப்படிப்பட்ட பாஜகவுடன், தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கூட்டணி வைத்திருக்கிறது அதிமுக” என்று கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகள் நலனுக்காக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

”சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி வைரலாகி வருகிறது. இதற்கு அர்த்தம் பிரதமர் மோடி தனது ஆட்சியை மூட்டை கட்டி கொண்டு வீட்டுக்குப் போக வேண்டும் என்பதுதான். மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால் எடப்பாடி ஆட்சியும் சென்றுவிடும்” என்றார்.

அடிக்கிற வெயிலுக்குக் கடலில் இல்லை, தாமரை எங்கும் மலராது. பதிலாகக் கருகிவிடும் உச்சியில் தகித்துக் கொண்டிருக்கும் சூரியன் போல் மக்களின் மனதிலும் கோபம் உள்ளது என்று குறிப்பிட்ட கனிமொழி உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த தேர்தலில் நாடும் நமதே, நாற்பதும் நமதே, தமிழ்நாடும் நமதே என மாற்றிக் காட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon