மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 27 மே 2020

கரூர்: பிரச்சாரத்தில் அதிமுக-திமுகவினர் மோதல்!

கரூர்: பிரச்சாரத்தில் அதிமுக-திமுகவினர் மோதல்!

கரூரில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது அதிமுக-திமுக கூட்டணியினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓயவுள்ளது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கரூர் பேருந்து நிலையப் பகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுக, திமுக கட்சிகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவினர் வெங்கமேடு பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்வதற்காக சென்றனர். அப்போது அவ்வழியாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டபடி வந்தனர்.

இருவரும் சந்தித்த இடத்தில் யார் பிரச்சாரம் செய்வது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக மற்றும் திமுக கூட்டணியினரிடையே கைகலப்பு உண்டானது. மோதலில் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்காக பிரசாரம் மேற்கொண்ட திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வாகனம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “கரூர் தொகுதியில் நடந்துகொண்டிருப்பது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமல்ல. யுத்தம்! நமது இறுதிக்கட்ட பிரச்சாரம் திட்டமிட்டபடி மாலை 4- 6 மணிவரை பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெறும். இதற்கான நீதிமன்ற உத்தரவினை பெற்றிருக்கிறோம். அதிகாரத்தை விட, அராஜகத்தை விட உண்மை வலிமையானது” என்று தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி இவ்வாறு அறிவித்துள்ள நிலையில், பேருந்து நிலையப் பகுதியில் தடை மீறி பிரச்சாரம் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எச்சரித்துள்ளார். தொடர்ந்து கரூர் பேருந்து நிலையப் பகுதிகளில் காவல் துறையினரும், துணை ராணுவப் படையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர்ப் புகை குண்டு வீசும் வஜ்ரா வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon