மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

நளினி, கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்!

நளினி, கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ்!

வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களைக் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நளினி சிதம்பரம் மற்றும் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாய்க்கும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய்க்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வருமான வரித் துறை வழக்குப்பதிவு செய்தது. வருமான வரித்துறை புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சிதம்பரம் குடும்பத்தினர் மீது வருமான வரித் துறை குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தது. இதுதொடர்பான வழக்கை 2018 நவம்பர் 2ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரம், கார்த்தி சி்தம்பரம் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து வருமான வரித் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்கும் படி நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon