மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நெருப்புக்கு இரையான நோட்ரே டேம்!

நெருப்புக்கு இரையான நோட்ரே டேம்!

பாரிஸ் அன்னை என அழைக்கப்படும் 850 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நோட்ரே டேம் கட்டிடம் நேற்று (ஏப்ரல் 15) காலையில் நடந்த தீவிபத்தில் சிதைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள நோட்ரே டேம் தேவாலயம், கோதிக் கட்டிடக்கலையின் முக்கியமான மைல் கல்லாகும். வருடந்தோறும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ள இத்தளம், ஈபிள் கோபுரத்தை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை விட கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக விரிவான புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. கட்டுமான பணியின் போது ஏதேனும் தீப்பிழம்பு இச்சம்பவத்துக்கு காரணமாகயிருக்கலாம் என கருதப்படுகிறது. மரத்தினால் செய்யப்பட்ட தேவாலயத்தின் வாசல் மற்றும் கூரை தீயினால் சரிந்துள்ளது.

பல நூற்றாண்டுகளாக பாரிஸ் நகரின் சந்தோஷமான மற்றும் துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நோட்ரே டேம் தேவாலய மணிகள் மூலமே அறிவிக்கப்பட்டு வந்துள்ளன. பாரிஸ் மக்களின் வாழ்வோடு கலந்த பாரிஸ் அன்னை எரியும் காட்சியை காண சகிக்காமல் மக்கள் துயரடைந்துள்ளனர்.

வரலாறு முழுக்கவே இத்தேவாலயம் சிதைவு, மீட்டுருவாக்கம் என்ற சுழற்சியிலேயே இருந்து வந்திருக்கிறது. 1160 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானம் 1260ஆம் ஆண்டில் நிறைவுற்றாலும், பல நூற்றாண்டுகளில் இதன் வடிவம் அடிக்கடி மாற்றப்பட்டிருக்கிறது.

1790ஆம் ஆண்டு நடந்த பிரெஞ்சு புரட்சியின் போது பாதிக்கப்பட்ட நோட்ரே டேம் தேவாலயத்தின் மத சித்திரங்கள் அழிக்கப்பட்டன. அதன் பின், விக்டர் ஹூகோவின் கோதிக் நாவலான, ‘தி ஹன்ச்பேக் ஆப் நோட்ரே டேம்’(1831) மூலம் பரவலான கவனத்தைப் பெற்றது. அதில் ஆலயத்தின் கட்டிட இடிபாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதியிருப்பார். அதன் பலனாக 1845ஆம் ஆண்டு ஒரு முக்கிய மறுசீரமைப்பு திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடைபெற்றது. தேவாலய முகப்பில் பல நூற்றாண்டுகளாக உண்டான வெப்பம் மற்றும் தூசு படிந்த அழுக்கின் காரணமாக மங்கிய அதன் அசல் வண்ணத்தை 1963ஆம் ஆண்டில் மீட்டெடுத்தனர்.

தற்போதும் மறுசீரமைப்பு பணிகளின் போதே இந்த விபத்தும் நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் கூரை மற்றும் வளைவு போன்றவை மூன்றில் இரு பங்கு பாதிப்படைந்துள்ளது. ஒரு தீயணைப்பு வீரர் பலத்த காயமடைந்துள்ளார். தேவாலயத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவதற்கு முன்பு பல கலைப்பொருட்கள் காப்பாற்றப்பட்டன.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் இதனைப் பற்றி கூறும் போது, “ இது விதியின் ஒரு பகுதியாகும், வரும் ஆண்டுகளில் நோட்ரே டேமின் சீரமைப்பு எங்கள் பொதுவான திட்டமாக இருக்கும். அதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என உறுதியளித்துள்ளார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon