மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பொய் சொல்லக் கூடாது: வசந்தகுமார் பேச்சு!

பொய் சொல்லக் கூடாது: வசந்தகுமார் பேச்சு!

இந்த நாட்டை பொய்யர்கள் ஆளக் கூடாது என்றும், நல்லவர்கள் ஆள வேண்டும் என்றும் தனது நிறைவுப் பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாரும், பாஜக – அதிமுக கூட்டணி சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், அமமுக சார்பில் லெட்சுமணனும், மக்கள் நீதி மய்யம் சார்பில் எபினேசரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயன்றீனும் போட்டியிடுகின்றனர்.

இன்று (ஏப்ரல் 16) நாகர்கோவிலில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார் வசந்தகுமார். இந்த கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. உட்படப் பல கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். தான் நாகர்கோவில் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவன் என்றும், காமராஜரின் மதிய உணவுத்திட்டத்தினால் வளர்ந்தவன் என்றும் கூறினார் ஹெச்.வசந்தகுமார். தற்போதுள்ள பாஜக ஆட்சியைப் பொய்யான ஆட்சி என்று தெரிவித்தார்.

“இந்திய அரசியலில் பிரதமர் மோடி போல பொய் சொல்லக் கூடாது. இது போல பொய்கள் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் கிடையாது. குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வாங்கித் தருகிறேன் என்று 5 ஆண்டுகளாக வாக்குறுதி அளித்த ராதாகிருஷ்ணன், 6ஆவது ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். அதன்பின், அது பற்றி நாடாளுமன்றத்தில் பேசினாரா? முழு மெஜாரிட்டி இருக்கிற மோடியிடம் பேசினாரா? ஒரு நாள் கூட வாய் திறக்காத பொய் ராதாகிருஷ்ணன் மீண்டும் வாக்கு கேட்டு வந்திருக்கிறார்.

2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றும், ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் 15 லட்சம் ரூபாய் அளிப்பேன் என்றும் பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். அது போன்ற பொய்யர்கள் ஆள்கிற நாடாக இது இருக்கக் கூடாது. நல்லவர்கள் ஆள வேண்டும். நாடாளுமன்றத்துக்கு வராதவர்தான் பிரதமராக இருக்கிறார். அவர் ராகுல் காந்தியின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை” என்று பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலைத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் முடங்கிக் கிடக்கின்றனர் என்றும், தற்போது தொழிற்சாலைகளை அமைக்கிறேன் என்று சொல்லும் ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகளாக என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார் வசந்தகுமார். வெற்றி பெற்றால் எம்பி தொகுதி நிதியில் 20 சதவிகிதம் கடற்கரையோர மீனவர் மக்கள் நலனுக்காகவும், மற்ற 80 சதவிகிதம் இதர பகுதியினருக்காகவும் செலவு செய்வேன் என்றார்.

“நாங்குநேரி தொகுதியில் சொந்தமாக ஜேசிபி எந்திரம் வாங்கி, 51 குளங்களைத் தூர் வாரி இருக்கிறேன். இது அரசு செய்ய வேண்டியது. கடவுள் ஒரு முறைதான் மனிதனைப் படைக்கிறான். அவன் இறக்கும்போது, என்ன செய்தான் என்று இந்த சமுதாயம் பேச வேண்டும். அதற்காகத் தான் இந்த வசந்தகுமார் தேர்தலில் நிற்கிறான்” என்று கூடியிருந்த மக்களிடையே தெரிவித்தார் வசந்தகுமார்.

கூடியிருந்த கூட்டணிக் கட்சித் தொண்டர்கள், பத்திரிகையாளர்களுக்கு நன்றி சொன்னவர், மழை வராமல் இருந்ததற்காக இயற்கைக்கு நன்றி தெரிவித்தார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon