மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

லஞ்சம் வாங்கியதாக உதவி ஆணையர் கைது!

லஞ்சம் வாங்கியதாக உதவி ஆணையர் கைது!

50,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் காவல் துறை உதவி ஆணையர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செந்தில்குமரன் என்பவர் சென்னை அசோக் நகரில் மசாஜ் பார்லர் செண்டர் நடத்தி வருகிறார். இவர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “மசாஜ் பார்லரில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் செய்ய உதவி ஆணையர் வின்சண்ட் ஜெயராஜ் வலியுறுத்தினார். ஆனால் இதுபோன்ற செயலை செய்ய முடியாது என்று கூறினேன். ஆனாலும் அதைச் செய்ய வற்புறுத்திய வின்சண்ட் ஜெயராஜ், அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனக்கு கமிசன் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார். இதன்படி, முதற்கட்டமாக ரூ.50,000 லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் வின்சண்ட் ஜெயராஜ் கூறினார்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, உதவி ஆணையருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் அளிப்பதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில்குமரன் எடுத்துச் சென்றுள்ளார். அந்த ரூபாய் நோட்டுகளை உதவி ஆணையர் அலுவலகத்தில் செந்தில்குமரன் வின்சண்ட் ஜெயராஜ்ஜிடம் வழங்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அங்கு மறைந்திருந்து அவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். வின்சண்ட் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வின்சண்ட் ஜெயராஜ் உதவி ஆணையராக இருக்கும் பகுதிக்குட்பட்ட அனைத்து பார்லர்களிலும் இவர் லஞ்சம் பெற்றிருக்கிறாரா, அதன்மூலம் சொத்துகள் சேர்த்திருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon