மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

தேர்தல்: 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

தேர்தல்: 1500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

மக்களவைத் தேர்தல் மற்றும் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளை இயக்கவுள்ளதாகத் தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. பிரச்சாரங்கள் நிறைவுபெற்றுள்ளன. இதற்கிடையில் தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது.

நாளை (எப்ரல் 17) மகாவீர் ஜெயந்தி, நாளை மறுநாள் (ஏப்ரல் 18) தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் ஏப்ரல் 19 புனித வெள்ளிக்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் ஆகும். இதனை முன்னிட்டு வெளியூர்களில் இருப்பவர்கள் இன்று முதலே சொந்த ஊர்களுக்குச் செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளிலும், அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் கூடுதல் பேருந்துகளை இயக்கவுள்ளதாகப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இன்று (ஏப்ரல் 16) இரவு 650 கூடுதல் பேருந்துகளும், நாளை 1500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. விடுமுறைக்காக வெளியூர் செல்பவர்கள் மீண்டும் சென்னை திரும்ப, வரும் 21ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சென்னைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

அதுபோன்று, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon