மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

புதுச்சேரி: வெல்வது நாராயணசாமியா? ரங்கசாமியா?

புதுச்சேரி: வெல்வது நாராயணசாமியா? ரங்கசாமியா?

புதுச்சேரி, காரைக்கால், யானம், மாஹி ஆகிய 4 பகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் நாராயணசாமி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் களமிறங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக மாஸ் சுப்பிரமணியன் களத்தில் உள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக, திமுக கட்சிகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமமுக வேட்பாளராக மூத்த பத்திரிகையாளரும் அமமுக பிரமுகருமான தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.

தொகுதியிலுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 970 வாக்குச் சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 59 ஆயிரத்து 266, பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 13 ஆயிரத்து 799, மூன்றாம் பாலினத்தவர் 96 என மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் உள்ளார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் ரெட்டியார் சமூகம், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வன்னியர், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் கிராமணி (நாடார்), அமமுக வேட்பாளர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். பொதுத் தொகுதியான புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் தலித் சமூகத்தினரை வேட்பாளராகியுள்ளார் டிடிவி தினகரன். இருப்பினும் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையேதான் போட்டி நிலவி வருகிறது என்று கூறுகிறார்கள் புதுச்சேரி வாசிகள்.

அதிமுக, பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக நாராயணசாமி போட்டியிட்டாலும், பிரச்சாரத்திற்கு பாஜகவை அழைக்கவில்லை, அவர்களும் வரவில்லை என்று கூறுகிறார்கள். சிறுபான்மையினர் வாக்குகள் போய்விடும் என்பதால் பாஜக கூட்டணியை மறைத்து மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளனர். வேட்பாளருக்குச் சிக்கல் இருப்பதாகக் கூறி எட்டு நாட்களுக்கு முன்பு அவரை அழைத்துக்கொண்டு நாகை மாவட்டத்திலுள்ள சிக்கல்களைத் தீர்த்துவைக்கும் முருகன் கோயிலுக்கு சென்றுவந்துள்ளார் முன்னாள் முதல்வர் ரங்கசாமி. மேலும் தனது சமுதாய வாக்குகளை மட்டுமே குறிவைத்து வருகிறார் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்.

திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வைத்திலிங்கம் தொகுதி மக்களுக்கு நல்ல பரிட்சயமானவர், எளிமையானவர். புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், கேரளா எல்லையில் உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த மாஹி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி, ரங்கசாமியை முன்னிலைப்படுத்தி மட்டுமே வாக்குகள் சேகரித்தார். மோடியை முன்னிலைப்படுத்தவில்லை என்பதால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை வெற்றிபெறவைக்க ஐந்து அமைச்சர்களுக்கு தலா இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை ஒப்படைத்த முதல்வர் நாராயணசாமி, மீதி 20 சட்டமன்றத் தொகுதிகளையும் தானே கவனித்துக்கொண்டார்.

சிறுபான்மையினர், தலித், மீனவர், முதலியார், ரெட்டியார், செட்டியார், யாதவர், பிள்ளை, நாடார் வாக்குகளை கணிசமாகப் பெற்று, அத்தோடு வன்னியர் வாக்குகளையும் பெற்றுவிட்டால் எளிதில் வெற்றியடையலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது காங்கிரஸ். 40 சதவிகிதத்துக்கும் அதிகமாகவுள்ள வன்னியர் வாக்குகளைச் சிதறாமல் வாங்கினால் மற்ற சமுதாய வாக்குகளைக் கொஞ்சம் வாங்கி வெற்றிபெற்றுவிடலாம் என்ற கணக்கில் உள்ளார் முன்னாள் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களைவிட முன்னாள் முதல்வர் ரங்கசாமியா இன்னாள் முதல்வர் நாராயணசாமியா என்ற போட்டிதான் உச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon