மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

மக்கள் நலனுக்காக செலவிடும் அரசியல் அறம் வளர்ப்போம்!

மக்கள் நலனுக்காக செலவிடும் அரசியல் அறம் வளர்ப்போம்!

தேசத்தின் மொத்த உற்பத்தியில் வரி வருவாயின் பங்கு (Tax-GDP ratio) உயர உயர, அரசின் நிதி ஆதாரங்களும் செயல்திறனும் கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டால்கூட, இந்தியாவில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

நீண்டகால பார்வையில் பார்த்தால், கடந்த இருபது வருடங்களில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்களும், அவற்றுக்கான ஒதுக்கீடுகளும் தொடர்ந்து விரிவடைந்துள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாகவே நலத்திட்டங்களுக்கு அரசு செய்யும் செலவின் போக்கு ஆரோக்கியமானதாக இருப்பதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013இன் இறுதியில் கொண்டுவந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பா.ஜ.க அரசு அமல்படுத்தாதது ஏன் என்று 2016 ஏப்ரல் மாதம் நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) அலுவலகம் விளக்கம் கேட்டது.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினால் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கிடைக்க வேண்டிய மாதாந்திர உதவித்தொகை (maternity benefits) கிடைக்காமல் போனது. பள்ளிகளில் மதிய உணவு, சிறுபிள்ளைகளுக்கான அங்கன்வாடிகளுக்கு 2015-16 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீட்டை அரசு 50 விழுக்காடு குறைத்தது.

மக்கள் நலனுக்காக மாநில அரசுகள் செய்யும் செலவுகளை “இலவசங்கள்” என்று தரக்குறைவாகப் பேசும் போக்கை இன்று நாம் பார்க்கிறோம். மக்கள் வரிப்பணத்தை அரசு “பொறுப்பாக” செலவழிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லும் பொருளாதார ஆலோசகர்கள் பலர் உள்ளனர்.

2030க்குள் ஐக்கிய நாடுகள் சபையின் 17 “வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளை” (Sustainable Development Goals) அடைய இந்திய மாநிலங்கள் எவ்வளவு முயற்சி செய்கின்றன எனும் தரவரிசைப் பட்டியல், 2018 டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. இந்த தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் இமாச்சல பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு. வளங்குன்றா மேம்பாட்டு இலக்குகளை நோக்கிப் பயணிப்பதில் முன்னிலையில் இருக்கும் மாநிலங்கள், “சமூகப் பொறுப்போடு” செலவு செய்ததால்தான் இந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதை அந்த பொருளாதார ஆலோசகர்கள் பார்க்கத் தவறுகின்றனர்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இதுவரை நாம் கண்டிராத அளவிற்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்துவதற்கும், மக்கள் நலனை உறுதி செய்வதற்கும் செலவு செய்வதே பொறுப்பான அரசியல்; மனிதாபிமானமுள்ள பொருளாதாரக் கொள்கை முடிவு.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon