மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதிநீக்க மனு தள்ளுபடி!

கனிமொழி, கதிர் ஆனந்த் தகுதிநீக்க மனு தள்ளுபடி!

திமுக வேட்பாளர்கள் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலை ஏற்று நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

இவ்விவகாரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லா சேட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை சட்டப்படியும், நியாயமான முறையிலும் நடத்த தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள், சிறப்புக் குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

தேர்தலில் தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்காக கோவில்கள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் பிரச்சாரக் கூட்டங்களில் வாக்காளர்களுக்கு நூதன முறையில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். மார்ச் 27ஆம் தேதியன்று வேப்பலோடை கிராமத்தில் கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் சார்பிலும் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. கதிர் ஆனந்தின் வீடு உள்ளிட்ட இடங்களிலும், அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரின் செயல்பாடுகள் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நடைமுறையில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள் மத்தியில் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க செய்துள்ளது. இவர்கள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி தேர்தல் நடைமுறைகளை கேலிக் கூத்தாக்குவதுடன், பணம் இருந்தால் வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் தேர்தல் நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்க செய்து மக்களவைக்குள் நுழைய முயலும் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்யக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 5ஆம் தேதியன்று மனு அனுப்பினேன். இதுவரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனுவின் அடிப்படையில் கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக கனிமொழி, கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon