மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

2ஆம் கட்டத் தேர்தல்: 427 கோடீஸ்வர வேட்பாளர்கள்!

2ஆம் கட்டத் தேர்தல்: 427 கோடீஸ்வர வேட்பாளர்கள்!

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 427 வேட்பாளர்கள் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து வைத்திருப்பவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

17ஆவது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கு 7 கட்டமாக நடக்கும் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் 427 வேட்பாளர்கள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து வைத்துள்ளனர் என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 11 விழுக்காட்டினர் ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்து வைத்துள்ளதாக வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 27 விழுக்காட்டினர் (427 பேர்) ஒரு கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாக தாக்கல் செய்துள்ளனர்.

அதேசமயத்தில் 41 விழுக்காடு வேட்பாளர்களின் சொத்து மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.9 கோடியாக உள்ளது’ என்று கூறியுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,644 வேட்பாளர்களில் 1,590 வேட்பாளர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் 209 பேர் தேசியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 109 பேர் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். 386 பேர் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள். சுயேட்சைகள் 888 பேர்.

முதலிடத்தில் வசந்தகுமார்

இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 53 பேரில் 43 பேரும், பாஜகவில் போட்டியிடும் 51 பேரில் 45 பேரும், திமுகவில் போட்டியிடும் 24 பேரில் 23 பேரும், அதிமுகவில் போட்டியிடும் 22 பேரும், பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிடும் 80 பேரில் 21 பேரும் கோடீஸ்வரர்கள். இந்தப் பட்டியலில் மிகப்பெரிய கோடீஸ்வரராக முதலிடத்தில் இருப்பவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.417 கோடி என்று வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தின் பூர்னியா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உதய் சிங் ரூ.341 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்திலும், பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே சுரேஷ் ரூ.338 கோடி சொத்துகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 16 வேட்பாளர்கள் தங்களுக்கு சொத்தே இல்லை என்று தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon