மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

பிரச்சாரம் ஓய்ந்தது: கட்டுப்பாடுகள் அமல்!

பிரச்சாரம் ஓய்ந்தது: கட்டுப்பாடுகள் அமல்!

தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்த அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 10ஆம் தேதியிலிருந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் என ஒரு மாதமாகவே தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே காணப்பட்டது. மார்ச் 26ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளுக்கும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தினந்தோறும் வாக்கு சேகரித்தனர். பிரச்சாரத்தில் பதிலடிகளுக்கு குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.

நாளை மறுநாள் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதையடுத்து இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. திருவாரூரில் பிரச்சாரம் தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இறுதிக்கட்ட பிரச்சாரத்தையும் திருவாரூரிலேயே நிறைவு செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான சேலம் நகரின் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சென்னைப் பகுதிகளில் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

கட்டுப்பாடுகள் அமல்

பிரச்சாரம் ஓய்ந்ததையடுத்து கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்படுள்ளது. கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும், வாக்காளர்களை ஈர்க்க இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தக்க்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தன.

புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி அருண். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 காலை 9 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon