மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வேலூரில் தேர்தல் ரத்து!

வேலூரில் தேர்தல் ரத்து!

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்திருந்தனர். இத்தொகுதியில் அனைத்துக் கட்சியினரும் முழுவீச்சில் பிரச்சாரம் நடத்தி முடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 29, 30 தேதிகளில் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதன்பின் ஏப்ரல் 1, 2ஆம் தேதிகளில் துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாய் ரொக்கம் வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித் துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். வேலூரில் தேர்தலை ரத்து செய்யவே இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் திமுக குற்றம்சாட்டியது.

வருமான வரித் துறை அளித்த அறிக்கையை முன்வைத்து வேலூரில் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தேர்தல் ஆணையம். இன்று (ஏப்ரல் 16) காலையில் இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையச் செய்தித்தொடர்பாளர் ஷேபல்லி சரண், வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படும் எந்தவித உத்தரவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பெயரில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும், அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

இந்த அறிவிப்பு தொடர்பாகப் பேசிய துரைமுருகன், தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்று கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தைத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா

ஆம்பூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பாக வாக்குக்கு 2,000 ரூபாயும், அமமுக சார்பாக 1,000 ரூபாயும், திமுக சார்பாக 500 ரூபாயும் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர் சம்பந்தப்பட்ட கட்சியினர். இந்த பணப்பட்டுவாடா குறித்த செய்திகள் வெளியானாலும், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார் பத்திரிகையாளரும் தேர்தல் கணிப்பாளருமான பிரனாய் ராய். தமிழகத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவைப் பிரதிபலிக்கும் விதமாக சுமார் 11 தொகுதிகள் இருக்கின்றன எனவும், அவற்றுள் வேலூர் தொகுதியும் ஒன்று எனவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அந்த வாய்ப்பு தள்ளிபோடப்பட்டுள்ளது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon