மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

மாணவனாக இருந்தால் போதும்!

மாணவனாக இருந்தால் போதும்!

ஒரு கப் காபி

கேள்வி: பலர் உங்களை இளம் வெற்றிச் சின்னம் என்று குறிப்பிடுகிறார்கள். நீங்கள்தான் மிகவும் இளைய, மிகவும் புத்திசாலியான, ஆளுமை வளர்ச்சிக்கான குரு என்று அனைவரும் கூறுகிறார்கள். உங்களை இவ்வாறு மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் விஷயம் என்ன? மற்ற பெரும்பாலான பேச்சாளர்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு வேறுபடுகிறீர்கள்?

ஜானி விம்ப்ரே: எப்போதும் என்னை எல்லாரும் இதைத்தான் கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு நான் எப்படி பதில் கூறுகிறேன் என்பதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியப்படுவதைப் பார்க்கிறேன்.

பலரும் மிகவும் ஆழமான அல்லது நம்ப முடியாத பிரமிக்க வைக்கும் பதில்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். எனவே, என்னை யாராவது இப்படிக் கேட்டால், நான் கூறப்போகும் பதில் அவரை பிரமிப்பில் ஆழ்த்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் அந்தப் பதிலை அந்த நபர் எழுதிக்கொள்ளத் தயாராக இருக்கும்படி அவரைத் தூண்டுவேன்.

நான் பதில் சொல்லத் தொடங்கும்போது, அவர் முகத்தை நீங்கள் பார்க்க வேண்டும், “இதற்கான பதில் நிச்சயமாக உங்களுக்குத் தெரிய வேண்டுமா? உண்மையாகவே, உண்மையாகவே இதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கண்டிப்பாகப் பதில் தெரிய வேண்டுமா?” என்று ஆவலைத் தூண்டிவிடுவேன்.

பிறகு, அவர் கண்களை நேராகப் பார்த்து, “நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறேனோ அதைத்தான் நான் செய்கிறேன்! நான் ஒரு சிறந்த மாணவன்” என்று கூறுவேன்.

வெற்றிச் சாதனைகளை முறியடித்துத் தங்களை நிரூபித்தவர்களைப் பின்பற்றுவது சிலருக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும்.

எனக்கு யாரும் சொல்லிக்கொடுக்க முடியும், பயிற்சி அளிக்க முடியும், கற்பிக்க முடியும் என்பதுதான் என்னை மற்றவர்களிடமிருந்து உண்மையிலேயே வேறுபடுத்துகிறது.

இதன் மூலம் நான் சொல்லவருவது இதுதான். ஒருவர், கேட்டுக்கொள்பவராக, பயிற்சி பெறத் தயாரானவராக, கற்றுக்கொள்ள முன்வருபவராக இருந்தால், பணம் படைத்தவராக, பயிற்சியளிக்கும் திறனுடையவராக அல்லது சிறந்த கணவராக, சிறந்த தந்தையாக, சிறந்த மனைவியாக, சிறந்த குடும்ப உறுப்பினராக, சிறந்த ஆன்மிகவாதியாக, சிறந்த மதத் தலைவராக இப்படி எதுவாக வேண்டுமானாலும் அவர் உருவாவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு குருவின் குடை நிழலில்தான் இருக்க வேண்டும். எல்லாரையும்விட மிகச் சிறந்தவர்கள் என்று யாருமே இல்லை என்று நான் நம்புகிறேன்.

என்னை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தும் விஷயம், என்னைச் சாதிக்க வைத்த விஷயம், நான் இன்னமும் ஒரு மாணவனாக இருப்பதுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் இன்னமும் அடைந்து விடவில்லை; நாம் எட்டிவிட்டோம் என்று நாம் நம்பும் அன்றுதான் நாம் தோல்வியடையத் தொடங்குகிறோம்.

நான் என்றுமே சிகரத்தை எட்டிவிட மாட்டேன். அதை நோக்கி என் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்று நான் கூறுவேன். நான் எப்போதுமே ஒரு மாணவன்தான்.

(ஜானி விம்ப்ரே அமெரிக்காவைச் சேர்ந்த ஆளுமைத் திறன் பயிற்சியாளர், பேச்சாளர், எழுத்தாளர்.)

நன்றி: வெற்றி குறித்த உரையாடல்கள், வெளியீடு: சக்சஸ் ஞான்

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon