மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

ஹரிஷுக்கு ஜோடியான ரியா

ஹரிஷுக்கு ஜோடியான ரியா

ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் புதிய காமெடி படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த ரியா சக்ரபோர்த்தி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தனுசு ராசி நேயர்களே என காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கவிருக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பின் ஹரிஷ் கல்யாண் இதில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ரியா சக்ரபோர்த்தியை தேர்வு செய்ததன் பின்னணியை இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியிருக்கிறார். “எனக்கு ஒரு புதிய முகம் தேவைப்பட்டது. அவர் நடித்த இந்தி படங்களை பார்த்திருக்கிறேன், ஒரே சமயம் கியூட்டாகவும் எனர்ஜியாகவும் அவரது நடிப்பிருக்கும். ரியாவை பார்க்கும் போது ஜெனிலியா, நஸ்ரியாவின் ஞாபகம் வருகிறது. ரசிகர்களை உடனே தொற்றிக் கொள்ளும் ஏதோ ஒருவிதமான எனர்ஜி அவர்களிடம் உள்ளது. எனது கதாபத்திரத்துக்கும் அதே மாதிரியான எனர்ஜி தேவைப்படுகிறது. அதனால் ரியா பொருத்தமாக இருப்பார் என ஹைதராபாத்தில் வைத்து கதையை கூறினேன். கதை பிடித்துப்போக சம்மதித்தார். தமிழில் ரியா அறிமுகமாகும் முதல் படமிது” என அப்பேட்டியில் இயக்குநர் தெரிவித்தார்.

“ரியாவின் கதாபத்திரம் வேடிக்கை நிறைந்தது. அதே சமயம் முட்டாள்தனமான கதாநாயகியும் அல்ல. மற்றொரு கதாநாயகியையும் முடிவுசெய்யவுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

பழசி ராஜா, காயங்குளம் கொச்சுன்னி போன்ற வெற்றிப் படங்களை தந்த பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 22) முதல் பூஜையுடன் தொடங்கவிருக்கிறது.

திங்கள், 22 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon