மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

சிலைகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் கோயில்களை மூடிவிடலாமே?: நீதிபதிகள்

சிலைகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் கோயில்களை மூடிவிடலாமே?: நீதிபதிகள்

வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட தமிழகக் கோயில் சிலைகளை மீட்க, சிறப்புக் குழு அமைக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கும், தொல்லியல் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கோடிக்கணக்கில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் நிலையில், சிலைகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் கோயில்களை மூடிவிடலாமே என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து, குறிப்பாகத் தமிழகத்திலிருந்து கடந்த 50 ஆண்டுகளாக சிவன், விஷ்ணு, விநாயகர், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட சிலைகள், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தச் சிலைகளை மீட்க மத்திய மாநில அரசுகள் இணைந்த சிறப்புக் கூட்டு மீட்புக் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத், பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் நேற்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, இது சம்பந்தமாக மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பிய மனுவுக்கு எந்தப் பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய கலாச்சாரத் துறை, தொல்லியல் துறை, வெளியுறவுத் துறை, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கிடையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தேவையான உள்கட்டமைப்பு ஏற்படுத்துவது, நிதி ஒதுக்குவது தொடர்பாக உத்தரவுகளை நிறைவேற்றவில்லை எனப் பொன் மாணிக்கவேல் ஆஜராகி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஒரு வாரத்தில் அரசாணை பிறப்பிக்கப்படும் எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திருமேனி நாதர் கோயிலில் உள்ள மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கில், 1300 ஆண்டு பழைமையான சிலை மாயமானது குறித்து நடவடிக்கை எடுக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.

மேலும், *கோடிக்கணக்கான ரூபாயைப் பக்தர்கள் கோயிலுக்குச் செலுத்தும் நிலையில், சிலைகளைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோயில்களையும் மூடிவிடலாமே” என வேதனை தெரிவித்தனர். திருமேனி நாதர் கோயில் சிலை மாயம் குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

புதன், 24 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது