மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

வாகனங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை: போக்குவரத்துத் துறை!

வாகனங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை: போக்குவரத்துத்  துறை!

மோட்டார் வாகன சட்டப்படி வாகனங்களில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றத்தில் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை, மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்த பி.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மட்டுமே அரசின் பணியாக இருக்கிறது. சாலைகள் பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. சாலை விதிகள் படி, முக்கியச் சாலை இணைப்புகளில் உயர் கோபுர மின்விளக்கு, வளைவுப் பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். இப்பணிகள் முறையாக நடப்பதில்லை. இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன. இதுமட்டுமின்றி இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட எல்இடி பல்புகளும் பொருத்தப்படுகின்றன. இந்த விளக்கொளியால், எதிரே வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சாலை விபத்துகளில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே தேசிய மாநில நெடுஞ்சாலைகளை முறையாகப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று முன்தினம் (ஏப்ரல் 22), நீதிபதிகள் கிருபாகரன் எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கப்படுவது தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் எல்இடி பல்புகள் பொருத்தி வாகனங்கள் ஓட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், அரசியல் கட்சியினர் தங்களது வாகனங்களில், கட்சிக் கொடி கட்டுவதற்கும், தலைவர்களின் பெயர்களை அச்சிடுவதற்கும், தாங்கள் வகிக்கும் பதவிகளை எழுதி வாகனங்களை இயக்குவதற்கும் சட்டத்தில் இடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த நடவடிக்கைகள் காவல் துறையையும், மக்களையும் மிரட்டும் வகையில் உள்ளது. இதற்கு தடை விதித்தாலே 50 சதவிகித குற்றச் செயல்கள் குறையும் என்று கூறியிருந்தனர். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறையும், உள்துறை செயலாளரும் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த மனு நேற்று (ஏப்ரல் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, போக்குவரத்துத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வாகனங்களில் கட்சிக் கொடி கட்டிக்கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்வது, பதவிகளைப் பெரிதாக எழுதிக் கொள்வது ஆகியவற்றுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்

இதை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

செவ்வாய், 23 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon