மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்!

டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்!

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Western Ghats). உலகப் புகழ் பெற்ற பாரம்பரிய இடங்கள் என யுனெஸ்கோ அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள அழகிய மலைத்தொடர். தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களை இயற்கை சூழ்ந்த காடுகளால் இணைக்கின்றன இந்த மலைத்தொடர்.

குஜராத் மாநிலத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், தமிழகம், கேரளம் வழியாக 1,600 கிலோமீட்டர் நீண்டு சென்று கன்னியாகுமரியில் முடிகிறது. அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றைத் தடுத்து, இங்குள்ள காடுகளுக்கு மழைப் பொழிவைத் தருகிறது.

இந்த மலைத்தொடர் மூலமே, ஆந்திரம், தமிழகத்தின் 40% நீர்த் தேவையும், மகாராஷ்டிரம், கர்நாடகம், கோவா, கேரளத்தின் 80% நீர்த் தேவையும் நிறைவு செய்யப்படுகின்றன.

8,841 அடி உயரமுடைய ஆனைமுடி என்ற தென்னிந்தியாவின் மிக உயரமான மலை உச்சியைக் கொண்ட இம்மலைத் தொடர் உலகில் பல்லுயிரினப் பெருக்கம் மிகுந்த 10 இடங்களில் ஒன்று.

இம்மலைத்தொடரில் அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட தேசிய வன விலங்கு சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பல்லுயிரினப் பெருக்கத்துக்கு வழிவகை செய்கின்றன. அரிய உயிரினங்களும், மூலிகைத் தாவரங்களும் நிறைந்த, சுற்றுச்சூழல் கேடுகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய பகுதியாகவும் இம்மலைத்தொடர் உள்ளது.

5,000 வகைத் தாவர இனங்கள், 139 வகைப் பாலூட்டிகள், 508 பறவைகள், 179 வகையான நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் இம்மலைத்தொடரில் உயிர் வாழ்கின்றன.

உலக அளவில் அழியும் நிலையிலுள்ள 325 வகை அரிய உயிரினங்கள் இங்கே கடுமையான போராட்டத்துக்கிடையில் உயிர் வாழ்வதாகச் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, இம்மலைத்தொடரிலுள்ள டாப் ஸ்லிப் என்ற இடம் இரண்டு புலிகள் சரணாலயங்களுக்குத் தாயாக விளங்குகிறது.

யானை, புலி, மான், காட்டெருமை, மயில், சோலை மந்தி எனப்படும் சிங்கவால் குரங்குகள், தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, தமிழகத்தின் மாநிலப் பறவையான மரகதப்புறா, ராஜநாகம் போன்ற பல அரிய வகை உயிரினங்களை டாப் ஸ்லிப் சென்றால் நேரில் பார்க்க முடியும்.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடம், ஒரு நெடிய வரலாற்றையும் பெரும் துயரத்தையும் மையமாகக் கொண்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மொட்டையாகி, பொட்டல் காடாகிப்போன இந்த மலைப் பகுதியை மீண்டும் இயற்கையான சோலையாக மாற்றிய ஓர் ஆங்கிலேயரைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.

அந்த ஆங்கிலேயரைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் உலக வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டம் ஆங்கிலேயர்களுக்கு அடிமையான காலத்திலிருந்ததே டாப் ஸ்லிப் உருவான வரலாறும் தொடங்குகிறது.

15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகமான கடல் வணிகத்தைத் தன் கையில் வைத்திருந்தது டச்சுகாரர்களே. இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்திய டச்சு நாட்டு வணிகக் கப்பல்கள் தெற்காசிய, கிழக்காசிய நாடுகளிலிருந்து ஏராளமான பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு சென்றன.

அந்த நேரத்தில் இங்கிலாந்து பலம் பொருந்திய நாடாக இருந்தாலும் அந்நாட்டு மக்களுக்குத் தேவையான வாசனைத் திரவியங்களான ஏலக்காய், லவங்கம், பட்டை, கிராம்பு, பூண்டு, சுக்கு, மிளகு உள்ளிட்ட அனைத்துமே இந்தியாவிலிருந்துதான் இறக்குமதியாயின.

இறக்குமதி வணிகத்தைத் தங்கள் கையில் வைத்திருந்த டச்சு வியாபாரிகளிடமிருந்து பொருட்களை வாங்கி உள்நாட்டில் வியாபாரம் செய்துவந்த இங்கிலாந்து வியாபாரிகள் எதிர்பாராத நேரத்தில் ஒரு பவுண்டு மிளகின் விலையை 5 ஷில்லிங் அளவுக்கு டச்சு வியாபாரிகள் உயர்த்தினார்கள்.

இதன் மூலம், இரு நாட்டு வணிகர்களுக்குள் எழுந்த மனக் கசப்பு, இரு நாட்டு அரசுக்கு இடையிலும் வந்தது. ஐரோப்பிய நாடுகளில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த டச்சு நாட்டு வியாபாரிகளின் செல்வாக்கைக் குறைக்க நினைத்த லண்டன் நகரத்து பிரிட்டிஷ் வியாபாரிகள் 24 பேர் ஒன்றிணைந்தனர்.

பிரிட்டிஷ் மகாராணியாரின் அனுமதியுடன் 1559, செப்டம்பர் 24ஆம் நாளன்று 72,000 பவுண்டு முதலீட்டுடன் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற ஒரு வணிக நிறுவனத்தைத் துவக்கினர்.

முதலில் வாசனைத் திரவிய வணிகத்துக்காகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்கள், வணிகத்துக்காக இந்தியா செல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் மகாராணியிடம் அனுமதி பெற்றனர்.

போட்டி, பொறாமை, காட்டிக்கொடுக்கும் குணம், பேராசை, ஒருவருக்கு ஒருவர் குழி பறித்தல் என்ற கெட்ட பண்புகள் நிரம்பக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தின் மன்னர்களை, ஆங்கிலேயர்கள் எளிதில் தன் வசப்படுத்தினர்.

ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு நிலத்தை மட்டுமே கொண்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தில், ஐரோப்பாவில் உள்ளதைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமான மக்கள்தொகை உள்ளதைக் கண்ட கிழக்கிந்திய நிறுவனத்தினர், இதை விடவும் சிறந்த சந்தை உலகில் வேறு எங்கும் இல்லை என்ற முடிவில், தங்கள் வியாபாரத்தைச் செய்துகொண்டே துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்த இந்தியத் துணைக் கண்டத்திலிருந்த சிறிய சிறிய நாடுகளைக் கையகப்படுத்தத் தொடங்கினர்.

இவ்வாறாக, கிழக்கிந்திய கம்பெனியினர் 200 ஆண்டுகளில் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதியைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த போதிலும், கொங்கு நாடான கோவை மண்டலத்தை அவர்களால் கைப்பற்றவே முடியவில்லை.

காரணம், மைசூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த மைசூர் சிங்கம் திப்பு சுல்தானின் ஆளுமையின் கீழ் அப்போது கொங்கு நாடு இருந்தது.

(தொடர்ந்து பயணிப்போம்…)

வெள்ளி, 26 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon