மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

டாப் ஸ்லிப் 2: நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!

டாப் ஸ்லிப் 2: நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!

திப்புவின் தந்தையான ஹைதர்அலியின் காலம் தொட்டே மைசூர் நாட்டைக் கைப்பற்ற ஆங்கிலேயர்கள் கடுமையாகப் போரடிவந்தனர். 1767–1769, 1780–1784, 1789–92, ஆண்டுகளில் மூன்று முறை ஆங்கிலேயர்கள் திப்பு-ஹைதரின் படையுடன் நேருக்கு நேராகப் போர் புரிந்தனர்.

இந்த மூன்று மைசூர் போர்களிலும் ஆங்கிலேயர்களுக்குத் தொடர்ந்து, தோல்வியே கிடைத்தது. எவ்வளவு போராடியும் திப்புவின் எல்லைக்குள் ஆங்கிலேயர்களால் நுழைய முடியவில்லை.

இறுதியாக, 1798–1799இல் ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் ஆகியோர் உதவியுடன் நான்காம் முறையாக திப்புவின் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்கள், மைசூர் அருகிலுள்ள திருவரங்கப் பட்டினத்திலிருந்த திப்புவை, அவரது தளபதி ஒருவன் மூலமாகவே சூழ்ச்சியால் வீழ்த்திப் பல ஆண்டுகள் நடந்த போரை 1799ஆம் ஆண்டின் இறுதியில் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

அதன் பிறகே, கொங்குநாடு ஆங்கிலேயர் வசமானது. புதிதாகத் தங்களுக்குக் கிடைத்துள்ள கொங்கு நாடு எப்படிப்பட்டது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, நிதி, நீதி, நிர்வாகம், இயற்கை வளங்கள் ஆகியவை எப்படி உள்ளன என்பதைக் கணக்கெடுக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

திப்புவிடமிருந்து மீட்ட கொங்கு நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த ஆய்வு நடத்தி, அறிக்கை கொடுக்குமாறு சென்னை மாகாண ஆளுநர் ஜெனரல் எட்வர்டு கிளைவ் (Edward Clive) என்பவர் மருத்துவ அலுவலரும், ஆய்வாளரும், இயற்கை ஆர்வலருமான டாக்டர் பிரான்சிஸ் புக்கானன் (Buchanan Francis Hamilton) என்பவரிடம் கேட்டுள்ளார்.

அதன் பேரில், திப்பு சுல்தான் ஆட்சியின் கீழிருந்த கிருஷ்ணகிரி, பாரமாகல், பெங்களூரு, மைசூர், வட கோவை, தென் கோவை மாவட்டங்கள், மலபார், கனரா ஆகிய பகுதிகளை நேரில் கண்டு, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, ஆட்சி நிர்வாகம், இயற்கை வளங்கள், போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்துகொண்டே கேரளக் கடற்கரை வரை பயணம் மேற்கொண்டார் புக்கானன்.

இவரோடு, ஓவியர், நில அளவையாளர், மருத்துவர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், சலவை செய்வோர், முடிவெட்டுவோர், சுமை தூக்கும் கூலியாட்கள், சமையலர்கள் என நூறுக்கும் அதிகமானோர் இப் பகுதிகளில் நடந்தே பயணம் செய்துள்ளனர்.

கொங்கு நாட்டில் வசித்து வந்த கிராமப்புற மக்களைச் சந்தித்து அவர்களின் உணர்வுகளை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக 1801-மார்ச் முதல் 1802,மே வரை, 14, மாதங்கள் பயணம் மேற்கொண்ட இவர் மற்றவர்களைப் போலில்லாமல் அடர்ந்த காடுகளின் வழியே ஊர் ஊராக நடந்தே சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடன் பேசியிருக்கிறார்.

இப்படி, பொள்ளாச்சியிலிருந்து மலபார் நோக்கிப் பயணம் செய்யும்போது அந்த வழியிலிருந்த பெருங்காடுகளைப் பார்த்த பிரான்சிஸ் புக்கானன் மலையின் அடிவாரத்திலிருந்து 24 கல் தொலைவிருந்த ஆனைமலை என்ற ஊர் வரை இம்மலைக்காடுகள் பரந்திருந்தன எனக் குறிப்பிடுகிறார்.

அங்கே பல அரிய உயிரினங்கள் வாழ்ந்ததாகவும் யானைகள் நிறைந்திருந்த காடு என்பதால்தான் இந்த காட்டுக்கு ஆனைமலை என்ற பெயர் ஏற்பட்டது எனவும் தனது பயண நூலில் (A Journey from Madras through the countries of Mysore, Canura and Malabar) குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளை மட்டுமே அறிந்த ஆங்கிலேய அதிகாரிகளால், கொங்கு நாட்டின் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த இயலாது என்பதை புக்கானன் உணர்ந்தார்.

இதையடுத்து “மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், நீதிபதி மற்றும் காவல் துறை அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளில் உள்ள ஆங்கிலேயர்கள் இங்குள்ள மக்கள் பேசும் உள்ளூர் மொழியையும் கற்க வேண்டும்.” என அறிக்கை கொடுத்தார்.

இதன் பிறகுதான், ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாற்றும் ஆங்கிலேய அதிகாரிகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் எனப் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.

பிரான்சிஸ் புக்கானனின் பயணம் மூலமாக நம் நாட்டு மக்களுக்கு ஒரு நன்மை கிடைத்தாலும், அவர் தயாரித்துக் கொடுத்த அறிக்கையின் மூலமாக இந்தியக் காடுகளுக்கு மிகப் பெரிய இழப்பும் பேரழிவும் ஏற்பட்டது.

மலைகளில் உருவான தோட்டம்

பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை வழியாகக் கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரான்சிஸ் புக்கானன், அங்குள்ள காடுகளின் வளத்தைப் பற்றியும் அதிலுள்ள தேக்கு, பலா, கடம்பு, வேங்கை, ஈட்டி, கடுக்காய் உள்ளிட்ட 69 வகையான வலிமையான மரங்களைப் பற்றியும், அதன் தன்மைகள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார்.

அங்குள்ள காடுகளில் வளர்ந்துள்ள அம்மரங்களை வெட்டி வெளியே எடுத்துக் கொண்டுவர முடியாத அளவுக்கு மரங்கள் உயர்ந்தோங்கி வளர்ந்து பெருத்துள்ளன என்பதைப் பற்றிப் பக்கம் பக்கமாகத் தனது பயண நூலில் எழுதியுள்ளார்.

பின்னாளில், இதையறிந்த சென்னை மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் தாமஸ் மன்றோ (Thomas Munro) இந்தப் பகுதியை ஆய்வு செய்து நிலங்களைக் கணக்கெடுக்கும் பணிக்காக, 1820இல் வார்டு, கொன்னர் (Ward and Conner) என்ற இரு ஆங்கிலேயர்களை ஆனைமலைப் பகுதிக்கு அனுப்பியுள்ளார்.

நில அளவை ஆய்வுப் பணிக்காக இங்கே வந்த அவர்கள் தாங்கள் அதுவரை வேறெங்கும் கண்டிராத பெரும் தேக்கு மரக் காடுகள் இங்கே இருப்பதைப் பற்றியும், இங்குள்ள பல்வகை மரங்களைப் பற்றியும் பட்டியலிட்டு ஆங்கில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஐரோப்பாவில் மிகப்பெரும் தொழில் புரட்சி ஏற்பட்டதன் காரணமாக அங்கே ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகின. பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைக்க மரத் தேவை மிகுதியாக இருந்தது.

பிரான்ஸ் நாட்டுடன் நடந்த போரில் சிதைந்து போயிருந்த இங்கிலாந்தின் துறைமுகங்கள், தொழிற்சாலைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தவும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏராளமான மரங்கள் தேவைப்பட்டன.

இங்கிலாந்தின் காடுகளிலிருந்த வலிமையான ஓக் மரங்கள் எல்லாம் வெட்டி முடிக்கப்பட்ட நிலையில், புதிதாகக் கப்பல் கட்ட, தொழிற்சாலைகளை அமைக்க, புதிய இரயில் பாதைகளை அமைக்க, துறைமுகங்கள் கட்ட, தந்திக் கம்பங்கள் நட எனப் பல்வேறு பணிகளுக்காகப் பெருமளவில் வலிமையான மரங்கள் தேவைப்பட்டன.

அப்போதுதான், தங்களின் காலனிப் பகுதியாக உள்ள தென்னிந்தியாவின் ஆனைமலையில் பெருமளவில் தேக்குமரம் இருப்பது குறித்த செய்தி வார்டு, கார்னரின் அறிக்கையின் மூலம் பிரிட்டிஷ் அரசுக்குத் தெரியவந்தது.

(பிரிட்டிஷாரின் தேவைக்காக ஆனைமலைக் காடு சிதைந்த கதை நாளை…)

டாப் ஸ்லிப்: மீண்ட சொர்க்கம்

வெள்ளி, 26 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon