மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

டாப் ஸ்லிப் 5: லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி?

டாப் ஸ்லிப் 5: லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி?

எஸ்.எஸ்.மணி

1885-1915 காலகட்டத்தில் இங்கு பணியாற்றிய கேப்டன். டக்ளஸ் ஹாமில்டன் (Douglas Hamilton), லூசிங்டன் (Lushington), பிஷார் (Fischer) போன்ற வனத்துறை அலுவலர்கள் மொட்டையாக இருந்த இந்த மலைப்பகுதியில் ஏராளமான தேக்கு மரங்களை நடவு செய்தும் அதில் தோல்வியே கண்டனர்.

அதற்கான காரணம் என்ன என ஹ்யூகோ வுட் ஆய்வு செய்தார். மலைப் பகுதிகளில் மண்டிக் கிடந்த Lantana Camara என்ற அறிவியல் பெயருடைய உண்ணிச் செடிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் தேக்கு மரங்களை நடவு செய்தார்.

(கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டு அதன் ரத்தத்தைக் குடித்து உயிர் வாழும் உண்ணியைப் போலவே, இந்த உண்ணிச் செடிகளும் காடுகளில் உள்ள மரங்களில் வேரில் உள்ள சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும். இந்தக் “களை” செடியின் வளர்ச்சியால்தான் இப்போது இந்தியாவிலுள்ள பெரும்பாலான காடுகளும், மரங்களும் அழிந்துவருகின்றன).

சோதனை முயற்சியாக 1916-17ஆம் ஆண்டில், 25 ஏக்கர் பரப்பளவில் நீலாம்பூர் தேக்கு மரங்களை நடவு செய்யத் துவங்கிய இந்தத் திட்டம், வனத்துறை காடு வளர்ப்பு மற்றும் சமூகக் காடுகள் பாதுகாப்பு எனப் பல திட்டங்களில் 1937வரை தொடர்ந்து செயல் படுத்தப்பட்டது.

இயற்கையாக முளைத்து வளர்ந்துவந்த நீலாம்பூர் தேக்கு மரங்களைச் செயற்கை முறையில் முளைக்கவைத்து நட்டு வளர்த்த பெருமை ஹ்யூகோ வுட்டையே சேரும்.

டாப் ஸ்லிப்பிலிருந்து இரண்டு கி.மீ. தூரத்திலுள்ள உலாந்தி பள்ளத்தாக்கில் மவுன்ட் ஸ்டூவர்ட் (Mount Stuart) எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறு வீட்டில்தான் ஹ்யூகோ வுட் வாழ்ந்தார்.

இந்த வீட்டுக்கு அருகில் சமையல் செய்யும் பணியாளர் ஒருவர் தங்குவதற்காக ஒரு சிறிய வீடும் குதிரைகளைக் கட்டிவைக்க ஒரு லாயமும் உள்ளன.

இரவில் காட்டு விலங்குகள் பல இவருடைய வீட்டுக்கு விருந்தாளியாக வந்து செல்லும். இப்போது, அந்த வீடு கரடி பங்களா என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும், தனக்குக் கீழுள்ள அலுவலர்களுக்கும், இவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கும் அன்றாட வேலைகளை ஒதுக்கிக் கொடுத்துவிட்டு மீதி நேரம் முழுதும் காடுகளில் தனியாகப் பயணம் மேற்கொள்வார்.

அப்போது தனது மேல் சட்டையிலும், கால் சட்டையிலும் இருந்த நான்கு பெரிய பைகளில் தேக்கு விதைகளைப் போட்டு நிரப்பிக்கொண்டு குதிரை மீதேறிப் போவார்.

மரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக இருந்த காடுகளில், உண்ணிச் செடிகளை அழித்து ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலத்தில் தனது வெள்ளிப் பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக்கால் ஒரு குத்து குத்துவார்.

ஒரு அடி ஆழம் வரை செல்லும் அந்தக் குழியில் ஒரு தேக்குக் கொட்டையைப் போட்டு ஷூ காலால் மிதித்து மூடுவார். பிறகு 12-15 அடி இடைவெளியில் மீண்டும் ஒரு குத்து. அந்தக் குழியில் ஒரு தேக்கங் கொட்டையைப் போட்டு ஒரு மிதி. பையிலிருக்கும் விதைகள் காலியானதும், மீண்டும் குதிரை மீதேறி வீட்டுக்கு வந்து தேக்கு விதைகளைச் சட்டைப் பையில் நிரப்பிக்கொண்டு காட்டுக்குப் புறப்பட்டுவிடுவார்.

இப்படிச் செய்ததன் விளைவாக அப்போது, ஒன்றிணைந்த சென்னை மாகாணத்திலும், இப்போது கேரளா மாநிலத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பரம்பிக்குளம் வனப்பகுதியிலும், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியிலுமாக ஏறக்குறைய 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வளர்ந்துள்ளன.

இங்குள்ள தேக்கு மரங்கள் அனைத்துமே ஹ்யூகோ வுட் போட்ட விதைதான் என்கின்றனர் அங்குள்ள காடர் இனப் பழங்குடி மக்கள்.

இப்போது பரம்பிக்குளம் (கேரளம்) காட்டுப் பகுதியில் இருக்கும் அத்தனை தேக்கு மரங்களும் ஹ்யூகோ வுட்டின் செயல் திட்டத்தில் உருவானவையே.

ஒவ்வொரு மரமும் இன்றைய மதிப்பில் 30ஆயிரம் முதல் மூன்று இலட்சம் ரூபாய் வரை மதிப்புடையது எனக் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பக ஊழியர்கள் கூறுகிறார்கள்.

ஹ்யூகோ வுட் நட்டுவிட்டுச் சென்றுள்ள அந்தத் தேக்கு மரத்தை எல்லாம் கண்காணித்து, அரக்கி சுத்தம் செய்து நேர்த்தியாக வளர்த்துவருகின்றனர் கேரள வனத்துறையினர்.

ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தைப் பராமரிக்கும் தமிழக வனத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காடுகளை அப்படி வளர்ப்பதில்லை.

“நாங்கள் இயற்கையில் முளைக்கும் மரங்களை இயற்கையாகவே வளரவிடுகிறோம். எதையும் வெட்டி, சுத்தம் செய்துவிடுவதில்லை” என்று காரணம் கூறுகின்றனர்.

வெளியுலகத் தொடர்பும், போதிய வசதி வாய்ப்புகளும் இல்லாத அந்தக் காலத்தில் டாப் ஸ்லிப் பகுதியில் வாழ்ந்த ஹ்யூகோ வுட், பணி ஓய்வு பெற்ற பின்னர் தன்னுடைய தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளார்.

வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அவர் எழுதிய உயிலில், மரணத்துக்குப் பின்னர் தனது உடலை அவர் வாழ்ந்த உலாந்தி பள்ளத்தாக்கிலுள்ள மவுன்ட் ஸ்டூவர்ட் வீட்டுக்கு அருகில்தான் புதைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார்.

அதன்படி அவரது உடல் இங்கே கொண்டுவரப்பட்டு மவுன்ட் ஸ்டூவர்ட் வீட்டிலிருந்து நூறடி தொலைவில் மலைச் சரிவில் புதைக்கப்பட்டுள்ளது என்று கூறிய உலாந்தி வட்டக் காடு வளர்ப்புத்துறை அலுவலர்கள் அவருடைய சமாதியையும் அடையாளம் காட்டினார்கள்.

1956இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துக்கு வந்தது, பாலக்காடு மாவட்டம் கேரளாவின் வசமானது.

அப்போது, ஹ்யூகோ வுட் வாசித்த மவுன்ட் ஸ்டூவர்ட் இல்லமும் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் நினைவிடமும் மட்டுமே தமிழகத்தில் சேர்ந்தது.

அவரது மலைப் பகுதியும் அவர் நட்டு வளர்த்து நேசித்த பல லட்சம் தேக்கு மரங்களும் கேரள எல்லைக்குள் சென்றுவிட்டன.

ஹ்யூகோ வுட் வசித்த வீட்டு வாசலில் தமிழக - கேரள எல்லையைக் குறிக்கும் நிலைக் கல்லில் மாநில எல்லையின் அடையாளம் இடப்பட்டுள்ளது.

நூறடி உயரம் உயர்ந்தோங்கியுள்ள தேக்கு மரங்களுக்கிடையில் அமைந்துள்ள ஹ்யூகோ வுட் என்ற அந்த மனிதரின் கல்லறையில், அவரது தோற்றம், மறைவைக் குறிக்கும் செய்திகளுடன், “என்னைப் பார்க்க நினைப்பவர்கள் என்னைச் சுற்றிப் பாருங்கள்“ எனப் பொருள்படும் வாசகம் லத்தீன் மொழியில் (Si Monumentum Requiris Circumspice) எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நினைவு நாளில் வுட் வசித்த வீட்டுக்குச் செல்லும் தமிழக வனத்துறை அதிகாரிகள் அவரது கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செய்கிறார்கள்.

(ஹ்யூகோ வுட்டின் அடிச்சுவட்டைத் தேடும் பயணம் தொடரும்…)

மீண்ட சொர்க்கம்

நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!

ஆனைமலையின் மரங்கள் வீழ்ந்த கதை!

காடுகளைக் காக்க ஹ்யூகோ வுட் சொன்ன வழி!

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon