மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 நவ 2019

தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணை ஆணையத்தை நிராகரிக்கும் பெண்!

தலைமை நீதிபதி மீதான புகார்: விசாரணை ஆணையத்தை நிராகரிக்கும் பெண்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் In-House panel விசாரணை ஆணையத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க மூத்த நீதிபதி போப்தே, பெண் நீதிபதிகள் இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகிய மூவர் அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அமர்வின் முதல்கட்ட விசாரணை ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் நேரில் ஆஜரானார். இந்நிலையில் இந்த விசாரணை ஆணையத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில்லை எனக்கூறி விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவிப்பில், “என்னுடைய வழக்கறிஞரோ அல்லது ஆதரவாளரோ யாரும் இல்லாமல் விசாரணை ஆணையத்தில் மூன்று நீதிபதிகள் முன்பு ஆஜரான போது எனக்குப் பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. இந்த ஆணையத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. எனவே இந்த ஆணையத்தின் விசாரணையில் இனி நான் பங்கேற்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “விசாரணையை ஆடியோ பதிவோ அல்லது வீடியோ பதிவோ செய்யப்படவில்லை. ஆனால் இதற்குக் கோரிக்கை வைத்திருந்தேன். இந்த கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 26 மற்றும் 19ஆம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகளைக் கூட எனக்கு வழங்கவில்லை” என்றும் அப்பெண் கூறியுள்ளார். விசாகா கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விசாரணை ஆணையம் செயல்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon