மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை!

மிஸ்டர் லோக்கல் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 17ஆம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசரும், இரண்டு பாடல்களும் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் சில காட்சிகளை மீண்டும் படம்பிடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி மே 17ஆம் தேதியன்று படம் ரிலீசாகாது எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளுக்கு இயக்குநர் ராஜேஷ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “நாங்கள் படத்தின் எந்தப் பகுதியையும் மீண்டும் படம்பிடிக்கவில்லை. இந்த செய்திகள் முற்றிலும் போலியானவை. சிறு சிறு கூடுதல் காட்சிகளை மட்டுமே படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளோம். மே 2ஆம் தேதியன்று அக்காட்சிகள் படம்பிடிக்கப்படும். இது வெறும் சிறிய பணிதான். இதனால் படத்தின் ரிலீசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

படத்தொகுப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும். திட்டமிட்டபடி மே 17ஆம் தேதியன்று படம் ரிலீசாகும். படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார். குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ப நகைச்சுவை கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆர்யா, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் போன்ற நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகவும் சில செய்திகள் வெளியாகின. இதையும் இயக்குநர் ராஜேஷ் மறுத்துள்ளார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon