மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 30 மா 2020

கர்ப்பிணி மரணம்: போலி பெண் மருத்துவர் கைது!

கர்ப்பிணி மரணம்: போலி பெண் மருத்துவர் கைது!

கோவை மாவட்டத்தில் கருக்கலைப்பின்போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மெட்டுவாவி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் செல்வராஜ் – வனிதாமணி. இவர்களுக்கு 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் வனிதாமணி கர்ப்பம் அடைந்தார். மீண்டும் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்த செல்வராஜும் வனிதாமணியும், கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர்.

வடசித்தூரில் உள்ள யேகோவாநிஷி ஆயுர்வேதிக் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை நடத்திவந்த முத்துலட்சுமியை இருவரும் அணுகினர். சித்த மருத்துவம் படித்த முத்துலட்சுமியின் மகன் கார்த்திக்கும் அந்த மருத்துவமனையில் இருந்தார். இருவரும் சேர்ந்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டனர். சில நிமிடங்களில் அவரது உடல்நிலை மோசமானது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் வனிதாமணி உயிரிழந்தார்.

இதையடுத்து, முத்துலட்சுமி தவறான மருந்தைச் செலுத்தியதால் வனிதாமணி உயிரிழந்ததாகப் புகார் தெரிவித்தனர் அவரது உறவினர்கள். இது குறித்து நெகமம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசாரின் விசாரணையில், முத்துலட்சுமி மருத்துவப் படிப்பு எதையும் படிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆயுர்வேதம் படித்ததாகக் கூறி, போலி மருத்துவராக அப்பகுதியில் வலம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வனிதாமணியும் கார்த்திக்கும் தலைமறைவான நிலையில் அவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று (ஏப்ரல் 30) பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையில் அதிகாரிகள் குழு முத்துலட்சுமியின் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தோழியின் வீட்டில் முத்துலட்சுமி மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, நேற்றிரவு அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நெகமம் காவல் நிலையத்தில் தற்போது முத்துலட்சுமியிடம் விசாரணை நடந்து வருகிறது. முத்துலட்சுமியின் மகன் கார்த்திக் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் போலீசார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon