மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

ஃபோனி புயல்: ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை!

ஃபோனி புயல்: ஒடிசாவில் மஞ்சள் எச்சரிக்கை!

வங்கக்கடலில் இருந்து ஒடிசா நோக்கி நகரும் ஃபோனி புயலால், ஒடிசா மற்றும் ஆந்திராவின் வடக்கு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபோனி புயலானது வடமேற்குத் திசையில் நகர்ந்து வருகிறது. அதி தீவிரப் புயலாக இருந்த ஃபோனி தற்போது கடுமையான புயலாக மாறியுள்ளது. ஒடிசாவின் பூரி நகரில் இருந்து 680 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து 430 கி.மீ. தொலைவில் உள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் வடமேற்குத் திசையில் மேலும் நகர்ந்து, ஒடிசாவின் கோபால்பூர் – சந்த்பாலி இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூரி மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் ஃபோனி கரையைக் கடக்கும்போது 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும், அதிகபட்சம் 205 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஃபோனி புயலினால் ஆந்திரத்தின் வடக்கு பகுதியிலுள்ள ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம், விஜயநகரம் மாவட்டங்களில் பெருமழையில் இருந்து மிகப்பெருமழை வரை நாளையும் நாளை மறுநாளும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். இதேபோல, ஒடிசாவின் தெற்குக் கடலோரப் பகுதியிலும் பெருமழைப் பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒடிசாவிலும் வடக்கு ஆந்திரத்திலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்தில் கங்கை நதி பாயும் பகுதிகள், இமயமலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா மாநிலங்களிலும் பெருமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும், கடலில் அலையின் சீற்றம் வழக்கத்துக்கு மாறாக இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 7வது நாளாக தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

ஃபோனி புயலால் ஒடிசாவிலுள்ள 5 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளுக்குத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். புயல் சீற்றம் காரணமாக, ஒடிசாவிலுள்ள 11 கடலோர மாவட்டங்களில் தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு பூரி மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon