மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?

படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் உண்டா?

பா.நரேஷ்

கல்லூரிப் படிப்பு தேவையா என்ற கேள்வி சமீப காலங்களில் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. பொருளாதாரப் பெருவெளியில் கல்லூரிப் படிப்பு என்பது வேலைவாய்ப்பிற்கான தேவையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள், கல்லூரிப் படிப்பால் எந்தப் பிரயோஜனமும் இல்லை எனும்போது கல்லூரிப் படிப்பிற்கான தேவை கேள்விக்குள்ளாகிறது. பொருளாதாரத்தைத் தாண்டிய ‘சாதனை’ப் பெருவெளிகளின் கயிற்றில் மட்டுமே நிலைகொள்ளாமல் தொங்கிக்கொண்டிருக்கிறது கல்லூரிப் படிப்புகளின் தேவை.

“காலேஜ் படிச்சிட்டு வர்ற பசங்களால எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவங்களுக்கு 2 வருஷம் ட்ரெயினிங் குடுத்தாத்தான் எங்களுக்குத் தேவையான வேலை வாங்க முடியும். முக்கியமா இந்த காலேஜ் டாப்பர்ஸ் வேஸ்ட். அவங்களால எங்க டீமோட அடாப்ட் ஆகமுடியாது” என்றார் ஐடி கம்பெனி நடத்திவரும் மென்பொருள் நிபுணர் ஒருவர்.

அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு இந்தியா வந்தபோது, மற்ற கம்பெனிகளில் வேலை செய்வதற்கு பதிலாகத் தனியாக ஒரு கம்பெனி ஆரம்பித்துவிடலாம் என்று தொடங்கினார். ஐடி துறையில் கஸ்டமர்களைப் பிடிப்பதுதான் தொழிலுக்கான ஆதாரம். தனக்கு அமெரிக்காவில் நல்ல தொடர்புகளும் நண்பர்களும் இருந்ததால் தனியாக மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கியதாகக் கூறினார். தனது பெயரையும் கம்பெனியையும் வெளிப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பேச ஆரம்பித்தார்.

எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்திருந்தாலும் மென்பொருள் துறையில் வேலை வழங்கப்படுகிறதே. மென்பொருள் துறை சார்ந்த வேலைகளுக்கு மென்பொருள் துறை சார்ந்த படிப்புகள் அவசியமில்லையா?

இங்க B.Sc, M.Sc Computer science படிச்சவங்களும் சரி B.E, M.E Computer science படிச்சவங்களும் சரி, ஒரே விதமான அறிவோடதான் இருக்காங்க. அவங்க தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களோட அளவு வேறுபடலாம். ஆனா, இந்த வேலைக்கு என்ன அறிவு தேவையோ அது அவங்ககிட்ட இருக்காது. அதை நாங்கதான் கத்துக்குடுக்கணும்.

அப்படியென்றால் இந்த டிகிரிகள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்கிறீர்களா?

எதுக்குமே ஆகாது என்கிறேன். இன்னைக்கு Indian Educational Syllabusல இருக்குற பாடங்கள் எல்லாம் அவுட் டேட்டட். அவற்றைவிட அதிகமான தெளிவான பாடங்கள் ஆன்லைன் கிளாஸஸ்ல கிடைக்குது. அதுவும் இங்க தமிழ்நாட்டுல இருக்க எஞ்சினியரிங் புக்ஸ் வாங்கி பாருங்க. அதெல்லாம் ஆதிகாலத்து சிலபஸை சின்னச் சின்ன மாற்றங்களோட வெச்சிருக்காங்க. அதையெல்லாம் படிச்சிட்டு வர்றவங்கக்கிட்ட என்ன திறமையை நாங்க எதிர்பார்க்க முடியும்!?. அவங்ககிட்ட இருக்க குறைந்தபட்ச Observation, Discipline மட்டும்தான் எங்களுக்கு தேவைப்பட்டது. அது இருந்தா வேலை சொல்லிக்குடுத்து எங்களுக்குத் தேவையானதை வாங்கிக்குவோம்.

எல்லாப் படிப்புகளுக்கும் இதே நிலமைதானா?

அது தெரியல. அட்வான்ஸ்டுன்னு சொல்லப்படுற Software துறையே இந்த லட்சணத்துல இருக்குன்னா, மத்தத பத்தியெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ன..

அப்புறம் எப்படி அவங்களை தயார்படுத்துறீங்க?

வர்றவங்களுக்கு ட்ரெய்னிங் பீரியட் இருக்கு. எல்லா கம்பெனிகளும் இந்த வரிசையிலதான் இயங்குது. குறைந்தபட்சம் ஆறுமாசம், அதிகபட்சம் இரண்டு வருஷம். இந்தக் காலகட்டத்துக்குள்ள ட்ரெயினிங் கொடுத்து எங்களுக்கு தேவையான ப்ராடக்ட்ஸ தயார் பண்ணிக்குவோம். அப்படியில்லாதவங்கள ட்ரெய்னிங் பீரியட் முடிஞ்சவுடனே அனுப்பிடுவோம். பெரும்பாலும் காலேஜ் டாப்பர்ஸ்தான் அப்படி இருப்பாங்க. ட்ரெய்னிங் மூலமாதான் எந்தத் துறை படிச்சவங்களா இருந்தாலும் எங்களால வேலை வாங்க முடியுது. காலேஜ் டைம்ல நீங்க ஒரே இடத்துல உட்காரவும், அப்சர்வ் பண்ணவும் கத்துக்கிட்டா போதும். அதுதான் எங்க வேலைக்குத் தேவையான Psychological behavior. Content எங்களுக்கு முதல் கட்டத்துல முக்கியம் இல்லை. அவங்களால எங்களுக்குத் தேவையான வேலையை செய்ய முடியுமான்னு போகப் போக நாங்க தெரிஞ்சுக்குவோம். அப்படி அவங்களால முடியலைனா, அப்பவே லே-ஆப்தான்.

அவ்வளவு சுலபமாவா?

ஆமா, அதனாலதான் நாங்க Employment policies-ல ரொம்ப தெளிவா இருப்போம். தொழிலாளர்களுக்கான கூடம் இது கிடையாது. இது கஸ்டமர்களுக்கான கூடம். இங்க தேவை இருந்தா உள்ளே, இல்லைனா வெளியே. சிம்பிள்!

அப்போ ஏன் நீங்க டிகிரி இல்லாதவங்களை வேலைக்கு எடுத்துக்கக் கூடாது?

அதுல ஒரு பிரச்சினை இருக்கு. எங்களுக்கு டிகிரி தேவையில்லை என்பது உண்மைதான். ஆனால் டிகிரி இல்லாம எங்களால ஃபில்டர் பண்ண முடியல. இந்தத் துறைக்கான குறைந்தபட்ச அறிவும் அறிமுகமும் தேவை. கல்லூரிகளிலிருந்து தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது எங்களுக்கு வேலை கம்மி. இல்லைன்னா Reference space ரொம்ப அதிகமாகிடுது. கோடிப் பேர்ல இருந்து நூறு பேரை எடுக்குறதுக்கும், லட்சம் பேர்ல இருந்து நூறு பேரை எடுக்குறதுக்கும் வித்தியாசம் இருக்குதான...

அதுக்கும் ஒரு வழி ரெடி பண்ணிட்டிருக்கோம். Online Testing and Recruitment. அதாவது ஒரு கேம் விளையாட்டு மாதிரி சில டெஸ்ட் வெச்சு அதுல ஜெயிக்குறவங்களுக்கு ட்ரெய்னிங் குடுத்து வேலைக்கு எடுத்துக்கலாம்னு இருக்கோம். அதுக்கு ஒரு Software-ம் ரெடி பண்ணிட்டிருக்கோம். எத்தனை பேர் வேணும்னாலும் அப்ளை பண்ணி இந்த டெவலப்பிங் கேமை விளையாடலாம். ஸ்கோர் அடிப்படையில அந்த Software, தேர்ந்தெடுத்த Candidate லிஸ்ட் அனுப்பும். அவங்களை மட்டும் இண்டர்வியூ வெச்சு வேலைக்கு எடுத்துக்குவோம். இனிமே, காலேஜ் டிகிரிக்கெல்லாம் வேலை இல்லை. யாருக்கு திறமை இருக்கோ அவங்க வரலாம், வேலை செய்யலாம்.

எல்லா கம்பெனிகளும் இப்போ இந்த மாதிரியான Recruiting app-களை டெவெலப் பண்றதுல ரொம்ப ஆர்வமா இருக்காங்க. இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அது பத்தின பேச்சு பரவலாகும். அப்போ இந்த Undervalued Education System தேவையில்லாம போகும்.

- என்று அவர் பேசியதைக் கேட்கும்போது பயமாக இருந்தது.

உலகமும் தொழில்நுட்பமும் அளவு கடந்த வேகத்துடன் பயணித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், இன்னும் கல்லூரிகளில் சீட் வாங்குவதையே மிகப் பெரிய வெற்றியாகக் கருதிக்கொண்டு, வேலைவாய்ப்பு, வாழ்க்கை குறித்த கனவுகளுடன் நம் மாணவர்களைத் தயார் செய்வதில் பயனில்லை என்றே தோன்றுகிறது. இந்தத் தகவல்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, இதற்கேற்ப அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கல்லூரிகளை அல்ல, திறமையைத் தேட வழிவகை செய்வோம். இளைஞர்களின் எதிர்காலம் படிப்புகளில் இல்லை, படிப்பினைகளிலும் அனுபவங்களிலும் உள்ளது.

படிப்பில் போடும் முதலீடு திரும்பக் கிடைக்குமா?

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon