மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

திமுக ஆட்சியில் சபாநாயகர்: பிரேமலதா

திமுக ஆட்சியில் சபாநாயகர்: பிரேமலதா

திமுக ஆட்சியில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொண்டாரா என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (மே 1) அக்கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேமுதிக கொடியை ஏற்றிவைத்த விஜயகாந்த், அங்கிருந்த தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுகவுக்கு 4 தொகுதிகளிலும் முழு ஆதரவு தெரிவித்துள்ளோம். முதல்வர் என்னை பிரச்சாரம் செய்யக் கேட்டுக்கொண்டார். விஜயகாந்தும் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். 4 தொகுதிகளிலும் விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். அதுகுறித்த தேதியை தலைமைக் கழகம் அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.

சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதே என்ற கேள்விக்கு, “3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பது சபாநாயகர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வசம் உள்ளது. எதிர்க்கட்சி என்றால் குற்றச்சாட்டுகள் வைக்கத்தான் செய்வார்கள். அதில் எது உண்மை, எது பொய் என்பது குறித்து சபாநாயகர், தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும். திமுக ஆட்சிகாலத்தில் மட்டும் சபாநாயகர் நடுநிலையோடு நடந்துகொண்டாரா என்றால் அது கேள்விக்குறிதான். இதுகுறித்து நிரூபிக்க வேண்டியது சபாநாயகர்தான். குற்றச்சாட்டு சொல்வதனால் மட்டும் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது” என்று தெரிவித்தார்.

பொன்பரப்பி விவகாரம் குறித்து பேசியவர், “சாதி மோதலை தூண்டி அதன்மூலம் யாரும் ஆதாயம் தேடக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு முன்னேறும். எனவே சாதி மோதல்களை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்படக் கூடியவர்கள். பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்” என்று குறிப்பிட்டார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon