மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

சதுப்பு நிலங்களில் கட்டுமானப் பணி: கண்டனம்!

சதுப்பு நிலங்களில் கட்டுமானப் பணி:  கண்டனம்!

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டவும், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகம் கட்டவும், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை ஒதுக்கிப் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. விவசாய நிலங்களில் அரசே கட்டடம் கட்டுவது வேலியே பயிரை மேய்வது போல் இருப்பதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சோழிங்கநல்லூர், ஒக்கியம் - துரைப்பாக்கம் பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரம் உள்ள சதுப்பு நிலங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டவும், தமிழ்நாடு இசை பல்கலைக் கழகம் அமைக்கவும் ஒதுக்கீடு செய்து தமிழக வருவாய்த் துறை பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்யக் கோரி, சேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (மே 1) நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், குறிப்பிட்ட இந்த நிலம், சதுப்பு நிலம் அல்ல எனத் தீர்ப்பளித்துள்ளதாகவும், இந்த வழக்கை விசாரிக்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கில், அரசு உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கே அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதைச் சுட்டிக் காட்டி, தமிழக அரசின் இரு அரசாணைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகமும், இசைப் பல்கலைக்கழகமும் அமைய உள்ள நிலம் சதுப்பு நிலம் அல்ல என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யவில்லை எனக் கூறிய நீதிபதிகள், நீர் சேமிப்புப் பகுதிகளைப் பாதுகாக்காவிட்டால், தண்ணீருக்காகப் பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

சதுப்பு நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தவும், ஏற்கனவே கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை ஆய்வு செய்து எல்லைகளை வரையறை செய்ய வேண்டும் எனவும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதுடன், அந்த கட்டுமானங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கத் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தனி தொலைபேசி எண்களை அறிமுகம் செய்யவேண்டும் என, தமிழ்நாடு சதுப்பு நில ஆணையத் தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வேலியே பயிரை மேய்ந்தது போல விவசாய நிலங்களில் வான் உயரத்திற்குக் கட்டிடங்களை அரசே கட்டினால், விவசாயிகள் எங்கு விவசாயம் செய்வார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனைத்துப் பிரிவினருக்கும் பாகுபாடின்றி வரும் பசிப் பிணியைப் போக்குவது விவசாயிகள்தான் எனவும் கருத்து தெரிவித்தனர்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon