மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

ஒரே நுழைவுத் தேர்வு: உயர்கல்வித் துறை அறிவிப்பு!

ஒரே நுழைவுத் தேர்வு: உயர்கல்வித் துறை அறிவிப்பு!

முதுநிலைப் படிப்புகளுக்கான ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்று தமிழக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

எம்பிஏ, எம்சிஏ மற்றும் முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேர டான்செட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டுமென்று அறிவிப்பு வெளியானது. அதே நேரத்தில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முதுநிலைப் படிப்புகளில் சேர ஏயுசிஇடி என்ற தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் உயர்கல்விக்கான இரண்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய சூழலுக்கு மாணவர்கள் உள்ளாகினர்.

இந்நிலையில், இன்று (மே 1) முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஒரே நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக உயர்கல்வித் துறை. இந்த நுழைவுத் தேர்வை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், அக்குழுவில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர், கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் உயர்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டான்செட் நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை (மே 2) நடைபெறவுள்ளது. அதன்பிறகே, இது பற்றி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் உயர் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு எழுந்ததாகத் தகவல் வெளியானது. அதன்பின்னர், கலந்தாய்வை நடத்தும் பொறுப்பில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் விலக, அந்த பொறுப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் பிஇ விண்ணப்பம்

2019-2020ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க நாளை முதல் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம். இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய மே 31ஆம் தேதி கடைசி நாள் என்றும், ரேண்டம் எண் வரும் ஜூன் 3ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ரூ.250, சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் விண்ணப்பிப்போர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon