மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

ராணுவ செலவு: 4ஆவது இடத்தில் இந்தியா!

ராணுவ செலவு: 4ஆவது இடத்தில் இந்தியா!

உலகில் ராணுவத்துக்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் குறித்த ஆய்வறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சிக்கான நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், ‘கடந்த ஒரே ஆண்டில் ராணுவ செலவினங்களை 11 விழுக்காடு அளவுக்கு உயர்த்தி உலக அளவில் ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் முதல் 20 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பிடித்துள்ளது. பாகிஸ்தான் 2018ஆம் ஆண்டில் ராணுவத்துக்கு 11.4 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. ராணுவத்துக்கு இந்தியா 2018ஆம் ஆண்டில் செய்த செலவு 3.1 விழுக்காடு அதிகரித்து 66.5 பில்லியன் டாலராக உள்ளது. உலகளவில் இராணுவத்துக்கு அதிகளவில் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

உலகளவில் ராணுவத்துக்குச் செலவிடப்படும் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதியை அமெரிக்காவும், சீனாவும்தான் செலவிடுகின்றன என்று கூறும் இந்த ஆய்வு, ‘அமெரிக்கா 649 பில்லியன் டாலர்களைக் கடந்த ஆண்டில் ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. சீனா 250 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. தொடர்ந்து 24ஆவது ஆண்டாகச் சீனாவின் ராணுவ செலவுகள் 5 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டு வருகிறது. 1994ஆம் ஆண்டு சீனா ராணுவத்துக்கு செலவிட்ட தொகையைக் காட்டிலும் தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் 3ஆவது இடத்தில் சவூதி அரேபியாவும், 5ஆவது இடத்தில் ஃபிரான்ஸும் உள்ளன’ என்கிறது,

மேலும், “கடந்த ஆண்டில் ராணுவ செலவுகள் உலகின் மொத்த உற்பத்தியில் 2.1 விழுக்காடு அளவுக்கு அதிகரித்துள்ளது. அதேபோல ராணுவ உபகரணங்கள் இறக்குமதியைப் பொறுத்தவரையில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. எல்லையில் நிலவும் பதற்றங்களால் இந்தியா தொடர்ந்து ராணுவ உபகரணங்கள் இறக்குமதியை அதிகரித்து வருகிறது. இந்தியாவுடைய ராணுவ பட்ஜெட்டானது பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட்டை விட 6 மடங்கு அதிகமாகும்’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon