மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 19 பிப் 2020

திமுக - தினகரன் நெருக்கம்: எடப்பாடி

திமுக - தினகரன் நெருக்கம்: எடப்பாடி

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலம் திமுகவுக்கும் தினகரன் கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் ஒரு வருடத்துக்கும் மேலாக தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையின் பேரில் மூவருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை திமுக அளித்துள்ளது.

கோவை விமான நிலையத்தில் இன்று (மே 1) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எந்த அடிப்படையில் சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறது என்று தெரியவில்லை. ஏனெனில் 3 பேரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள். கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி கொறடா சபாநாயகரிடம் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கும் எதிர்க்கட்சியினருக்கும் சம்பந்தமே கிடையாது” என்று தெரிவித்தார்.

திமுகவுக்கும் தினகரன் கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டுவிட்டதாக குறிப்பிட்ட முதல்வர், “3 எம்.எல்.ஏ.க்களும் திமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. எங்களுடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இயக்கத்திற்கு விரோதமாக செயல்படும்போது நாங்கள் சபாநாயகரிடம் புகார் அளிக்கிறோம். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஏன் கொந்தளிக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது? நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதன் மூலம் இரு தரப்புக்கும் இடையே உள்ள நெருக்கம் வெளிப்பட்டுவிட்டது” என்றும் விமர்சித்தார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon