மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 நவ 2019

தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் நீக்கம்!

தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் நீக்கம்!

ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் இந்திரா காந்தி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். 2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை தங்களைப் பணிநீக்கம் செய்யத் தடை விதிக்க வேண்டுமெனவும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத காரணத்தைக் கூறித் தங்களை பணிநீக்கம் செய்யத் தடை விதிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இன்று (மே 1) இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படியும், கல்வி உரிமைச் சட்டத்தின்படியும், 2011ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும், அதன்படி 2012, 2013, 2014, 2017ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டதாகவும், நடப்பாண்டில் இந்த தேர்வு நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியது எனவும், அதன்பின் காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களைப் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.

ஆசிரியர் தேர்வு எழுதாத ஆசிரியர்களிடம் 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

“தகுதித் தேர்வு எழுதிவிட்டு 60,000 பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், தகுதித் தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்தக் காரணமும் இல்லை. 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்குக் கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தன் உரையில் குறிப்பிட்டார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon