மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மோடிக்கு எதிரான முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு!

மோடிக்கு எதிரான முன்னாள் ராணுவ வீரரின் வேட்புமனு நிராகரிப்பு!

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்கிய முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூரின் வேட்பு மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

ஹரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர் யாதவ் எல்லை பாதுகாப்புப் படை வீரராக பணியாற்றினார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எல்லையில் பணியிலிருந்தபோது காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ராணுவ வீரர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது என்றும் மூத்த அதிகாரிகள் உணவு பொருட்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். இந்த காணொளி பார்ப்பவர்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி, ராணுவ உயர் அதிகாரிகள் மீது கோபத்தை உண்டாக்கியது.

அவரது புகாருக்கு மறுப்புத் தெரிவித்த இந்திய ராணுவம், தேஜ் பகதூரை பணியிலிருந்து நீக்கியது. இந்நிலையில் தேஜ் பகதூர் கடந்த மாதம் வாரணாசியில் மோடிக்கு எதிராகச் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்துள்ள பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் ராஸ்ட்ரிய லோக் தளம் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், அவரை சமாஜ்வாதி கட்சி மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதி வேட்பாளராக அறிவித்திருந்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளரான சாலினி யாதவ் மாற்றப்பட்டு தேஜ் பகதூர் அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி நியமிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அஜய் ராய் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் தேஜ் பகதூர் வாரணாசியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வேட்புமனுவில் முரண்பாடு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே இதுதொடர்பாக சில ஆதாரங்களைக் கேட்டுள்ளது. பின்னர் ஆதாரங்கள் இன்று காலை வரை சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரி சுரேந்திர சிங், வேட்புமனுவில் உள்ள முரண்பாடுகள் குறித்து அவர் பதிலளிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ள தேஜ் பகதூர், ராணுவத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் கேட்கப்பட்டது. அதை சமர்ப்பித்தும் என்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இது தவறானது என்று கூறியுள்ளார்.

மேலும், தான் காலை 10.50 மணிக்கே வேட்புமனுவைத் தாக்கல் செய்யச் சென்ற போதும் தன்னை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி இந்த உண்மையான காவல் வீரனைப் பார்த்து பயந்துவிட்டதால்தான்,எனக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்படுகிறது'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon