மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மழை வேண்டி இசைக்கருவிகள் வாசிக்க உத்தரவு!

மழை வேண்டி இசைக்கருவிகள் வாசிக்க உத்தரவு!

வரும் நாட்களில் மழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும், இசைக்கருவிகள் இசைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது இந்து சமய அறநிலையைத் துறை.

கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்குத் தென்மேற்குப் பருவ மழை தமிழகத்துக்கு நீரை அளிக்கவில்லை. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே கஷ்டப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது. நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வழிகளைச் சமூக ஆர்வலர்கள் ஆய்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மழை வேண்டி சிறப்பு யாகங்களை நடத்த வேண்டுமென்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிசேகம் செய்ய வேண்டுமென்றும், நீர் தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்ய வேண்டுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஓதுவார்களைக் கொண்டு சுந்தரரின் ஏழாம் திருமறையையும், திருஞானசம்பந்தரின் 12ஆம் திருமறையிலுள்ள தேவார மழைப் பதிகத்தையும் பாட வேண்டும். மழை வேண்டி நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கொண்டு அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபட வேண்டும். சிவபெருமானுக்கு சீதள கும்பம், ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்ய வேண்டும். மாரியம்மனுக்கு இளநீர், தயிர், பால் கொண்டு அபிசேகம் செய்ய வேண்டும்” என்று அறநிலையத் துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருண பகவானுக்கான மந்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டுமென்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கோயில் பழக்கவழக்கத்துக்கு உட்பட்டு கற்றறிந்தவர்களைத் தேர்வு செய்து, அவர்களைக் கொண்டு இவற்றைச் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது மண்டலத்தில் உள்ள எந்தெந்த கோயில்களில் எந்த தேதிகளில் மழை வேண்டி யாகம் செய்யப்படவுள்ளது என்பது குறித்த விவரங்களை வரும் 2ஆம் தேதிக்குள் இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனைத்து மண்டல இணை ஆணையர்களும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon