மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

இடைத் தேர்தல்: பிரச்சாரத்தைத் தொடங்கிய தலைவர்கள்!

இடைத் தேர்தல்: பிரச்சாரத்தைத் தொடங்கிய தலைவர்கள்!

4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இன்று தொடங்கினர்.

காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இடைத் தேர்தல் களத்தில் உள்ளன. 4 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் தங்களது பயணத் திட்டத்தையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் உழைப்பாளர் தினமான இன்று (மே 1) தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பத்திரிகையாளர்களிடம் சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமியை அறிமுகம் செய்துவைத்தார். அதனைத் தொடர்ந்து கார் மூலமாக சூலூர் சென்றவர், ஜல்லிப்பட்டியில் தனது இடைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விலையில்லா மின்சாரம் அளித்த ஒரே அரசு அதிமுக அரசுதான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

“சாலை, குடிநீர் என மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு பயனளிக்கும் ஆணைமலை ஆறு-நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்துவோம். ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு குடிமராமத்து செய்துள்ளதன் மூலமாக மழை பெய்தால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகக் கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். அதேபோல அதிமுக அரசு மாணவர்களுக்கு செயல்படுத்திய திட்டங்களால்தான் 10 வகுப்பு தேர்ச்சி விழுக்காடு அதிகரித்துள்ளது. திமுக, அதிமுக செய்துள்ள திட்டங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிகமாக செய்திருக்கிறார்கள் என்று தெரியும்” என்று பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின்

ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகைய்யாவை ஆதரித்து நேற்றே தனது பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற மே தின பேரணியை முடித்துக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அத்திமரப்பட்டி, பெரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அங்கிருந்த பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை ஸ்டாலினிடம் பொதுமக்கள் தெரிவிக்க, மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கண்டிப்பாக திமுக ஆட்சி அமைக்கும். அப்போது உங்களின் குறைகளை நிவர்த்தி செய்துவைக்கிறேன் என்று அவர்களிடம் ஸ்டாலின் உறுதியளித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் ஓட்டப்பிடாரம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிவருகிறார்.

இதேபோல மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை நாளை மறுநாள் ஒட்டப்பிடாரத்தில் தொடங்கவுள்ளார். டிடிவி தினகரன் தனது பிரச்சாரத்தை இன்று திருப்பரங்குன்றத்தில் தொடங்குகிறார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon