மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 பேர் பலி!

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 பேர் பலி!

மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் 15 வீரர்கள், ஓட்டுநர் என 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

2018 ஏப்ரல் 22ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 40 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேரின் உயிரிழப்பை நினைவு கூர்ந்தும், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர்கள் கடந்த வாரம் முதல் நினைவு தினத்தை அனுசரித்து வந்துள்ளனர். 40 பேரின் உயிரிழப்புக்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு இடங்களில் பேனர்களும் வைத்துள்ளனர். இந்நிலையில் அதற்குப் பழிவாங்கும் விதமாகவே இன்று (மே 1) கட்சிரோலியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கட்சிரோலி மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை அப்பகுதியில் சாலைப் பணிகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனத்தின் 27 இயந்திரங்கள் மற்றும் வாகனங்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படை வீரர்கள் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்திருக்கின்றனர். இந்த தாக்குதலில் ஒரு ஓட்டுநர் உட்பட சி-60 கமாண்டோ படையைச் சேர்ந்த 15 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஜாம்போர்கேடா மற்றும் லெந்தாரி இடையே நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ட்விட்டரில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, ”மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான கமாண்டோ வீரர்களுக்கு வீர வணக்கம். அவர்களது உயிர்த் தியாகம் மறக்கப்படாது” என்று தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் என்பது மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்காகப் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். கட்சிரோலி எஸ்பியுடனும், மாநில டிஜிபியுடனும் தொடர்ந்து தொடர்பிலிருந்து வருவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீரர்களின் மரணம் ஒரு போதும் வீண் போகாது என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிரா அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த எப்ரல் 11ஆம் தேதி நடந்த போது, கட்சிரோலி பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகே 150 மீட்டர் தொலைவில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon