மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

மெட்ரோ: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

மெட்ரோ: மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

மெட்ரோ ரயில் சேவையைத் திட்டமிட்டு நிறுத்தியதாகக் கூறி 3 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது மெட்ரோ நிர்வாகம்.

கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. இதனை அமைக்க உறுதுணையாக இருந்த பணியாளர்கள் 8 பேரைக் கடந்த டிசம்பர் மாதம் பணியிடை நீக்கம் செய்தது சென்னை மெட்ரோ நிர்வாகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ரோவில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாகத் தற்காலிக ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதற்கும், அவர்களுக்கு அதிக சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) அந்த 8 ஊழியர்களையும் நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிட்டது மெட்ரோ நிர்வாகம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கோயம்பேட்டிலுள்ள மெட்ரோ நிறுவனத் தலைமையகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர் நிரந்தரப் பணியாளர்கள். ரயில் நிலைய ஊழியர்களும் இதில் கலந்துகொண்டதால் மெட்ரோ ரயில் இயக்கம் நிலைகுலைந்தது. நேற்று தொழிலாளர் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு சென்னை வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.

கடந்த 29ஆம் தேதியன்று பணியாளர்கள் போராட்டம் தொடங்கப்பட்டபோது, சிக்னல் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியது மெட்ரோ நிர்வாகம். அன்றைய தினம் மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து தவறான கட்டளையைக் கொடுத்து சிக்னல் கோளாறை ஏற்படுத்தியதாக மனோகரன், பிரேம்குமார், சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகிய 3 ஊழியர்களைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

இன்றும் (மே 1) 3ஆவது நாளாக மெட்ரோ நிரந்தரப் பணியாளர்களின் போராட்டம் தொடர்கிறது. விடுமுறை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இன்று 85 சதவிகித ரயில் சேவை நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று காலையில் மெட்ரோ ரயில் கட்டுப்பாட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக 18 ஊழியர்கள் மீது காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon