மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 25 மே 2020

டிஜிட்டல் திண்ணை: தினகரன் எம்.எல்.ஏ.வைக் கடத்திய சி.வி.சண்முகம்

டிஜிட்டல் திண்ணை: தினகரன் எம்.எல்.ஏ.வைக் கடத்திய சி.வி.சண்முகம்

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், தகுதி நீக்கம் செய்வதற்கான வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் மூன்று எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய மூவரின் புகைப்படங்கள் வாட்ஸ் அப்பில் வந்தன. பின்னாலேயே டெக்ஸ்ட் மெசேஜ் வந்தது.

“விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு கொறடா ராஜேந்திரனின் புகாரின் பேரில் சபாநாயகர் தனபால் நேற்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஏப்ரல் 26 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இதுபற்றி தெரிவித்திருந்ததை இப்போது நினைவுபடுத்துவது சரியாக இருக்கும்.

’அந்த 3 எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து சாதாரணமாக பேரம் பேசினால் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதனால் சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்பப் போவதாக சொன்னால் வழிக்கு வருவார்கள். அப்போது ‘இன்னும் இரு வருடங்களுக்கு எம்.எல்.ஏ.ஆக இருக்கணும்னா ஆட்சியை ஆதரிக்கணும். இல்லேன்னா 18 பேர் மாதிரி ஆயிடுவீங்க’ என்று எச்சரிப்பதற்காகத்தான் இந்த ஆயுதத்தைக் கொறடா மூலமாக கையிலெடுத்துள்ளார் எடப்பாடி என்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தால் மூவரையும் தகுதி நீக்கம் செய்துவிட்டு, சட்டமன்றத்தில் தனக்கு தேவையான மெஜாரிட்டி வரம்பினை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்பதே எடப்பாடியின் திட்டம்’

அதன்படியே அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் தொடர்புகொண்டு அதிமுக தரப்பில் பேசி வருகிறார்கள். எப்படிப் பேசுகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதிமுகவில் இருந்து யாரும் அந்த எம்.எல்.ஏ.க்களோடு நேரடியாகப் பேசவில்லை. பேசினால் பதிவு செய்து தினகரனிடம் கொடுத்துவிடுவார்கள், அவர் வெளியிட்டுவிடுவார் என்ற எச்சரிக்கை உணர்வுடன் இந்த 3 எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள்.

நேற்று (ஏப்ரல் 30) அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் சிலர் கள்ளக்குறிச்சி தொகுதியிலுள்ள தியாகத்துருகத்திலுள்ள பிரபுவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அதே ஊரில் பிரபுவின் அம்மாவும், அப்பா அய்யப்பாவும் தனியாக வசிக்கிறார்கள். இந்நிலையில் பிரபுவின் வீட்டுக்கு சென்ற சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு நெருக்கமான உறவுகளிடம் சிறிது நேரம் பேசியிருக்கிறார்கள். பின் அங்கிருந்து சி.வி.சண்முகத்துக்கு போன் போட்டு போனை பிரபுவின் உறவினர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். அப்போது அவர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம், ‘பிரபு இப்பதான் முதல் தடவையா எம்.எல்.ஏ. ஆகியிருக்காரு. ஏன் அவரு இப்படி போறாரு? இன்னும் ரெண்டு வருஷம் எம்.எல்.ஏ. வா இருக்கிறத விட்டுட்டு, அரசாங்கம் மூலமாக பலன் அடையுறத விட்டுட்டு, அந்த 18 பேரு மாதிரி மறுபடியும் தெருவுல நிக்கப் போறாரா? அவர்கிட்ட சொல்லுங்க. ஒழுங்கா புத்திமதி சொல்லி அவரை அரசாங்கத்துக்கு ஆதரவா வரச் சொல்லுங்க’ என்று கொஞ்ச நேரம் பேசியிருக்கிறார். அதன் பின்னரே அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னையில் இருந்த பிரபுவுக்கு போன் வந்திருக்கிறது. அதுவரை விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோரோடு எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் இருந்த பிரபு திடீரென கிளம்பி கள்ளக்குறிச்சிக்கு போய்விட்டார். சென்னையில் இருந்து அமைச்சரின் ஆட்களுடைய கண்காணிப்பில்தான் பிரபு அவரது சொந்த ஊருக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

அப்போதில் இருந்து அவரது போன் யாருக்கும் கிடைக்கவில்லை. அவரோடு நோட்டீஸ் அனுப்பப்பட்ட இரு எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகியோர் மாறி மாறி போன் செய்தாலும் பதில் இல்லை. இதுபற்றி தினகரனுக்கு தகவல் கொடுத்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும், ‘பிரபுவை அமைச்சரோட ஆட்கள் கடத்திக்கிட்டே போயிட்டாங்க. அவர் ஊருக்குப் போற திட்டத்துலயே இல்லை’ என்று கூறியிருக்கிறார்கள். தினகரனின் உதவியாளர் உடனடியாக பிரபுவின் உதவியாளர் மூர்த்திக்கு போன் போட்டு பேசியிருக்கிறார். ‘ அவர்கிட்ட சொல்லிடறேன். அவரே உங்க லயன்ல வருவாரு’ என்று மூர்த்தி சொல்லியிருக்கிறாரே தவிர, பிரபு நேற்று இரவு முதல் யாரிடமும் பேசவில்லை. அமமுகவின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் போன் செய்தபோதும் பிரபுவை பிடிக்க முடியவில்லை.

பிரபுவைப் போலவே மற்ற இரு எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களின் குடும்பத்தினரோடு பேசி அவர்களை தினகரனிடம் இருந்து பிரித்துக் கொண்டுவர கடுமையான முயற்சிகள் நடந்துவருகிறது என்பதுதான் இப்போதைய நிலவரம். இந்த ஆட்டத்தில் முதல் விக்கெட்டாக பிரபுவை தங்கள் பக்கம் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறது அதிமுக” என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

அதற்கு லைக் இட்ட ஃபேஸ்புக் தனது தகவலை டைப் செய்யத் தொடங்கியது.

“பிரதமர் மோடியின் காசி பேரணி, வேட்பு மனு தாக்கல் ஆகிய நிகழ்ச்சிகளுக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காசி சென்றது கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்த பரபரப்பில் இன்னொரு தகவல் அடங்கிவிட்டது. அது என்னவென்றால் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருக்கிற பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் மோடியின் வேட்பு மனு தாக்கல், அதற்கு முதல் நாள் நடந்த பேரணி ஆகியவற்றில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதிமுகவைத் தவிர பாஜகவுக்கு வேறு யாரும் ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை. இந்தத் தகவலை மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ், தமிழக பாஜகவினரிடம் தெரிவித்து, ‘தமிழகத்தில் நம்ம கூட்டணி என்னாச்சு? தேர்தலுக்கு முன்பே முடிந்துவிட்டதா?’ என்று கேட்டிருக்கிறார்” என்ற தகவலை ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

புதன், 1 மே 2019

அடுத்ததுchevronRight icon