மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 நவ 2019

சர்ச்சைக்கு நித்யா மேனன் விளக்கம்!

சர்ச்சைக்கு நித்யா மேனன் விளக்கம்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருந்தார். பின்னர் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடியின் ‘என்டிஆர் கதாநாயகுடு' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் சுமாராக வசூல் செய்தது. தற்போது 12 படங்களில் நித்யா மேனன் நடித்து வருகிறார். ஒவ்வொரு படமும் வெவ்வேறு படப்பிடிப்பு நிலைகளில் உள்ளது.

அண்மையில், தட்சமயம் ஒரு பெண்குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நித்யா மேனனை சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மறுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. நித்யா மேனன் திமிர் பிடித்தவர் எனவும், அவரை மலையாள திரையுலகிலிருந்து தடை செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்து வந்தனர்.

முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை, தனது சொந்த காரணங்களுக்காக நித்யா மேனன் சந்திக்க மறுத்துவிட்டார். இதை தனிப்பட்ட முறையில் அவமதிப்பாக எடுத்துக்கொண்ட தயாரிப்பாளர்கள் நித்யா மேனன் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நித்யா மேனன் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றபோது நித்யா மேனனின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்ததாகவும், அவரது தாய்க்கு புற்றுநோய் ஏற்கெனவே மூன்றாம் நிலையை எட்டிவிட்டதாகவும் தெரிவித்தார். படப்பிடிப்பின்போதே நித்யா மேனன் கேரவனுக்குள் நுழைந்து தனது தாயை நினைத்து அழுததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றைத் தலைவலியால் அவர் பாதிக்கப்பட்டதாகவும், அச்சமயத்தில் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதில்லை எனவும், பணியில் கவனம் செலுத்த விரும்புவதாகவும் நித்யா தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon