மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

எளிய வழிகள் எங்கும் உண்டு!

எளிய வழிகள் எங்கும் உண்டு!

ஒரு கப் காபி!

உலகை முதலில் வலம் வருபவருக்கே மாங்கனி என்று சிவன் கேட்டவுடனேயே, மயிலில் ஜெட் வேகத்தில் கிளம்பினார் சுப்பிரமணியர். அதனை ஆச்சர்யத்துடன் பார்வதி நோக்க, நின்ற இடத்தை விட்டு அகலாமல் யோசித்தார் விநாயகர். ‘அம்மையும் அப்பனுமே என் உலகம்’ என்று சொல்லிவிட்டு சிவனையும் பார்வதியையும் வலம்வந்தாராம். மாங்கனியையும் பெற்றுக்கொண்டாராம்.

இது கற்பனையா, உண்மையா என்ற விவாதம் இங்கு வேண்டாம். எந்தவொரு விஷயத்தையும் எளிதில் முடிப்பதற்கு ஒரு வழி உண்டு என்ற நீதியினை இக்கதையிலிருந்து பெறலாம். இப்படிப்பட்ட வழிகளைப் பயன்படுத்தி, தன்னளவில் நிறைவாக வாழ்பவர்கள் பலர் இந்த உலகில் உள்ளனர். சஞ்சீவியாக வாழவைக்கும் மாங்கனியைப் பெறுவதற்கு மட்டுமல்ல, தினசரி வாழ்வின் சிறிய நிகழ்வுகளில்கூட இப்படிப்பட்ட உபாயங்களைக் கைக்கொண்டு வெற்றி காண்பதும் உண்டு.

முழுக்கை சட்டையை அணிந்த பிறகு, சட்டையில் சுருக்கம் ஏற்படாமல் முழங்கை வரை மடித்துவிடுவதற்குச் சிரமப்படுபவர்கள் அனேகம். கொஞ்சம் விவரமானவர்களோ, சட்டையை அணிவதற்கு முன்னரே முழுக்கையை முக்கால் கையாக மாற்றிவிடுவர்.

தேநீர்க் கடையில் புழக்கத்திலுள்ள வெள்ளைக் கோப்பையில் சற்றே கலங்கிய நிறமுள்ள பகுதியைச் சிலர் தொட மாட்டார்கள். அதற்குப் பதிலாக, இடது கையால் கோப்பையைக் கையில் ஏந்தி தேநீர் அருந்துவர். காரணம் கேட்டால், ‘எல்லோரும் குடிக்கிற இடத்துல நாமளும் குடிக்கணுமாக்கும்’ என்பார்கள்.

மூட்டை மூட்டையாகத் துணிகள் குவிந்தாலும் சில நிமிடங்களில் துவைத்து முடிக்கும் பெண்கள் உண்டு. துணியில் எங்கு அழுக்கு படிந்திருக்கிறதோ, அந்த இடத்தை மட்டும் டிடர்ஜெண்ட் பவுடர் இட்ட நீரில் முக்கியெடுத்துத் தோய்த்தெடுப்பர். சில நிமிடங்கள் வேறு வேலைகள் பார்த்துவிட்டு, மீண்டும் வந்து அழுக்குத் துணிகளுடன் லேசாகச் சண்டையிடுவர். அவ்வளவுதான். துவைத்தல் எனும் நெடும்பணி தன் விஸ்வரூபத்தைத் தானாகக் குறுக்கிக்கொள்ளும்.

வீடு, அலுவலகம், வணிக நிறுவனம், பொதுநிகழ்ச்சி என்று எல்லா களங்களிலும் வெவ்வேறான பணிகள் இருக்கும். அவற்றை எளிதாகச் செய்து முடிப்பதற்குச் சிலரிடம் பல வழிகள் கைவசம் இருக்கும். அப்படிப்பட்ட நபர்கள், அந்தக் காரணங்களுக்காகவே கிண்டலுக்கும் ஆளாவார்கள். அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், இன்னொரு பணியை எளிதாகச் செய்து முடிப்பார்கள்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கிரகித்துக்கொண்டால் போதும். மிகச் சிக்கலான சிக்கலொன்றை எளிமையாகத் தீர்ப்பதற்கான உறுதி நம்முடன் ஒட்டிக்கொண்டுவிடும்.

- பா.உதய்

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon