மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

வாகனங்களில் கட்சிக்கொடி: டிஜிபி பதில் மனு!

வாகனங்களில் கட்சிக்கொடி: டிஜிபி பதில் மனு!

விபத்துகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரித் தொடரப்பட்ட வழக்கொன்றில், கட்சிக்கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்று காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் பயணிப்போர் சுங்கச்சாவடி கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருக்கும் ஊழியர்களுடன் சண்டையிடும் சூழல் நிலவுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்தியா முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், அவற்றைப் பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதாகவும், அவை ஒழுங்காக நடைபெறாத காரணத்தால் விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சாலைகள் இணைப்புப் பகுதிகளில் ஹைமாஸ் விளக்குகள், வளைவுப் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு, சாலைகள் நடுவே அரளிச்செடி போன்றவற்றை அமைக்கும் பணிகள் சரிவர நடைபெறாததால் விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. “இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட எல்இடி பல்புகள் அதிகளவில் பொருத்தப்படுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. 2016ஆம் ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 785 பேரும், 2017ஆம் ஆண்டில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 913 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார். இந்த விபத்துகளில் நாட்டிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. எனவே விபத்துகளைத் தடுக்கத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநிலச் சாலைகளை முறையாகப் பராமரிக்க உத்தரவிட வேண்டும்” என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த முறை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக் கொள்வது, தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதிக்கொள்வது ஆகியவற்றுக்கு மோட்டர் வாகனச் சட்டப்படி அனுமதி இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

நேற்று (ஏப்ரல் 30) இந்த வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விதிகளை மீறி கட்சிக்கொடி கட்டுவது, பெயர் பலகைகளில் பதவிகளைக் குறித்து வைப்பது போன்றவற்றை அகற்றவும் அபராதம் விதிக்கவும் போக்குவரத்துக் காவல் துறையின் உதவி ஆய்வாளர் நிலையிலுள்ள அதிகாரிக்கு உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இத்தகைய வாகனங்களை நிறுத்திச் சோதனையிட காவல் துறையைச் சேர்ந்தவர்களில் சிலர் தயங்குவதாகவும், இவ்வாறு சோதனை செய்யப்படாமல் இருப்பதன் மூலமாக சட்டவிரோத மற்றும் சமூகவிரோதச் செயல்கள் நடைபெற வழி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கட்சிக் கொடி மற்றும் பதவி பெயர் பலகைகளுடன் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை. சுங்கக் கட்டணங்களைச் செலுத்தாமல் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சண்டையிடும் சூழலும் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தயாராக இருக்கிறோம்" என்று டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon