மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 26 மே 2020

வழக்குகளை விசாரிப்பது ரோபோ நீதிபதி!

வழக்குகளை விசாரிப்பது ரோபோ நீதிபதி!

டிஜிட்டல் டைரி - சைபர் சிம்மன்

ஐரோப்பிய நாடான எஸ்டோனியா சின்னஞ்சிறிய தேசம் என்றாலும், தொழில்நுட்ப பயன்பாடு என்று வரும்போது உலகிற்கே வழிகாட்டும் டிஜிட்டல் தேசம். ஏற்கனவே எஸ்டோனியா, பெரும்பாலான அரசு சேவைகளை ஆன்லைனில் கொண்டுவந்திருக்கிறது. அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கியிருக்கிறது. ஆன்லைன் வாக்களிப்பு, ஆன்லைனில் வரித் தாக்கல் என பலவற்றை டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இந்த வரிசையில் தற்போது, நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து பைசல் செய்யவும் தொழில்நுட்பத்தை நாட தீர்மானித்துள்ளது. அந்தத் தீர்வு என்ன தெரியுமா? ரோபோ நீதிபதியை உருவாக்குவதுதான்.

ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கக்கூடிய வகையில் இந்த ரோபோ நீதிபதி சேவை அமைந்திருக்கும். அளவில் சிறிய வழக்குகள் கனம் பொருந்திய ரோபோ நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்கின்றனர். இதற்காகச் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியலுக்குச் சட்ட அந்தஸ்து வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் வழக்கறிஞர்களுக்கு உதவுவதற்காகச் சட்ட ரோபோக்கள் உருவாக்கப்பட்டுவரும் நிலையில் எஸ்டோனியா ஒரு படி முன்னே நின்று, நீதி வழங்கும் பொறுப்பையே ரோபோவிடம் ஒப்படைத்திருக்கிறது.

எஸ்டோனியா இப்படி வியக்க வைக்கிறது என்றால், ஆப்பிரிக்க நாடான சாட், அதை நினைத்து பரிதாபப்பட வைக்கிறது. ஏனெனில் அந்நாட்டில் கடந்த ஒராண்டு காலமாக பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். அந்நாட்டு அதிபர் இட்ரிஸ் டெபே (Idriss Deby) 2033 வரை தன்னைத்தானே அதிபராக அறிவித்துக்கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்துவதில் சமூக ஊடகங்கள் முக்கிய அங்கம் வகித்ததால், அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

தேர்தல் ஸ்டார்ட் அப்

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்போது எல்லாத் துறைகளிலும் பிரபலமாக இருக்கின்றன. தேர்தல் தொடர்பான ஸ்டார்ட் அப்களும் கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளன. அவற்றில் ஒன்று ரைட்2வோட் (Right2Vote). தேர்தலில் வாக்களிப்பதை ஆன்லைனுக்குக் கொண்டுவந்திருக்கும் ஸ்டார்ட் அப் இது. ஆம், இந்நிறுவனம் ஆன்லனில் வாக்களிப்பதற்கான வசதியை உருவாக்கியுள்ளது. அதுவும் கையில் உள்ள மொபைலிலிருந்தே செயலி வடிவில் வாக்களிக்க வழி செய்கிறது.

இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் என்.ஆர்.ஐ.கள், ராணுவ வீரர்கள், வேறு மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர் தேர்தலில் வாக்களிக்க உதவி செய்வதை இந்த ஸ்டார்ட் அப் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்மையில் இந்த ஸ்டார்ட் அப்பிற்கு மத்திய அரசின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இத்திட்டம் நாடாளுமன்ற ஒப்புதலுக்குக் காத்திருக்கிறது.

எதிர்வரும் தேர்தல்களில் இந்த வசதி அறிமுகமாகும் வாய்ப்பு இருக்கிறது. மகாராஷ்டிர மாநிலத் தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து தேர்தல்களில் இதை சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ளது. எல்லாம் சரியாக வந்தால் வருங்காலத்தில் வாக்குச் சாவடிக்குப் போகாமலே வாக்களிக்கும் வசதியும் அறிமுகமாகலாம்.

இதெல்லாம் சாத்தியமா எனும் சந்தேகம் இருந்தால், ஏற்கனவே நிறுவனங்களில் பங்குதாரர் கூட்டங்களில் எல்லாம் ஆன்லைன் வாக்களிப்பு முறை அமலுக்கு வந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உள்ளூர் குழுக்கள், சங்கங்கள், குடியிருப்பு அமைப்புகள் உள்ளிட்டவை இந்த ஸ்டார்ட் அப்பின் வாக்களிப்பு வசதியைப் பயன்படுத்திவருகின்றன.

இந்த ஸ்டார்ட் அப் பற்றி மேலும் அறிய: https://right2vote.in/

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon