மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 20 நவ 2019

ஜோதிகா அடிக்கும் ஜாக்பாட்!

ஜோதிகா அடிக்கும் ஜாக்பாட்!

சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா மற்றும் ரேவதி பிரதான பாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு ஜாக்பாட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா நடிப்பில் கடைசியாக வந்த காற்றின் மொழி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநர் ராதா மோகன் இதனை இயக்கினார். அதன் பின் ரேவதியுடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 11’ என தற்காலிக டைட்டில் வைக்கப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று 35 நாட்களுக்குள் எடுத்து முடித்துள்ளனர். தற்போது பின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை நேற்று(ஏப்ரல்30) மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜாக்பாட் என பெயரிடப்பட்டிருக்கும் கலர்புல் போஸ்டரில் ரேவதி மற்றும் ஜோதிகா காவல்துறை அதிகாரிகளாக உள்ளனர். ஜோதிகா எஸ் ஐ ஆகவும், ரேவதி கான்ஸ்டபிளாகவும் உடையணிந்துள்ளனர்.

இப்படத்தை பிரபுதேவா கதாநாயகனாக நடித்த குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியிருக்கிறார்.

ஜோதிகா, ரேவதியுடன் இணைந்து யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இசை விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு ஆர்.எஸ். ஆனந்த குமார்.

படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து சக்தி பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon