மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 26 மே 2020

தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம்: கிரண் பேடி

தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம்: கிரண் பேடி

அரசின் தினசரி செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாகப் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வந்தது. புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினரான லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில், அரசின் ஆவணங்களைக் கேட்கப் புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்து நீதிபதி மகாதேவன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

நீதிபதி தனது உத்தரவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு , அமைச்சர்களால் ஆட்சி செய்யப்படும் அரசின் தினசரி நடவடிக்கைகளில், துணை நிலை ஆளுநரால் தலையிட முடியாது. ஒவ்வொரு அதிகாரியையும் தனது வீட்டுக்கு அழைத்துத் தனி அரசை நடத்திக் கொண்டிருக்க முடியாது. அரசின் முக்கிய தீர்மானங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே முக்கிய பங்கு வகிப்பர். இல்லாவிட்டால் ஒரு அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான எந்த பயனும் இல்லை. துணை நிலை ஆளுநர் ஒரு நிர்வாகியாக செயல்பட அதிகாரம் இருந்தாலும் அவற்றுக்கு வரம்பு உண்டு. அவரது நிர்வாக அதிகாரத்தை சில சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். உச்சபட்ச அதிகாரம், பொதுநலன், தொழில்நுட்ப காரணங்கள் என்ற சாக்குப்போக்குகளின் கீழ் ஆளுநரால் அரசின் தினசரி விவகாரங்களில் தலையிட முடியாது.

புதுச்சேரி அரசின் அமைச்சர்கள் குழு ஏதேனும் கொள்கை விவகாரங்களில் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில்,துணை நிலை ஆளுநர் தலையிட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் செயல்பட முடியும். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. ஏனெனில் மக்களின் விருப்பப்படியே தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

யூனியன் பிரேதச, மாநில அரசுகளில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஒட்டி இந்த முடிவுக்கு வருவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

அதன்படி, ”முறையான மற்றும் உத்தரவாதமான கொள்கை முடிவை அமைச்சரவை எடுத்தபிறகு அதில் தலையிடக்கூடாது என எதிர்பார்க்கப்படுகிறது. 1963ஆம் ஆண்டுக்கான தொழில் குறித்த முன்மொழிதல்களை விதி 9, விதி 10ன் கீழ் முதலமைச்சரின் கீழ் இயங்குகிற உரிய அமைச்சரே முன்வைக்க வேண்டும் எனக் கூறுகிறது.

நிதி விவகாரங்களில் பொதுவாக அமைச்சரவைக் குழுவும், நிதித் துறையும் முடிவெடுக்கலாம். சேவைத் துறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறுகிறது.

இந்திய நிர்வாக சேவைகளின் கீழ் அரசு அதிகாரிகளை நியமிக்க ஆளுநர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 320இன் கீழ் இசைந்திருக்க வேண்டும்.

ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும்போது மற்றும் ஆளுநருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையில் இரு வேறான கருத்துகள் எழும்போது அமைச்சரவையில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தப்பட வேண்டும். வேறுபாடுகள் இருந்தால் ஆளுநர் அவற்றை குடியரசு தலைவருக்குப் பரிந்துரைக்கலாம். அவர் இறுதி முடிவு எடுப்பார்.

ஆளுநர் அரசின் அன்றாட நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாளும் தலையிட இயலாது. அமைச்சரவைக் குழுக்களாலும், முதலமைச்சராலும் முடிவுகள் எடுக்கப்படும். தலைமைச் செயலாளரும், அதிகாரிகளும் இதனோடு பிணைக்கப்பட்டுள்ளார்கள்.

அரசியலமைப்பு கோட்பாடுகளையும், சட்டமன்ற விதிகளையும் நிர்வகித்து நிர்வாகத்தை இயக்க ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரண்பேடி, ”நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே இவ்விவகாரத்தில் மேல் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வழக்கம்போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளை ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுகின்றது. புதுச்சேரி நன்றாக இருக்க நான் வாழ்த்துகின்றேன். இங்கு அனைத்து மக்களும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள்” என கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த தீர்ப்பை வரவேற்றதாகத் தெரிவித்த முதல்வர் நாராயண சாமி, துணை நிலை ஆளுநர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறினால் அவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடருவேன் என்று கூறினார். கிரண்பேடியின் நடவடிக்கைகளால் கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் கிடப்பில் இருப்பதாகவும், தற்போது புதுச்சேரி மக்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டில் தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை வரவேற்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு பாஜக அல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைச் செயல்பட அனுமதிக்க மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

புதன், 1 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon