மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

டாப் ஸ்லிப் 6: வரலாற்றைத் தொலைத்த வனத் துறை !

டாப் ஸ்லிப் 6: வரலாற்றைத் தொலைத்த வனத் துறை !

எஸ்.எஸ்.மணி

2012ஆம் ஆண்டில், மன்னார் குடி வனச்சரக அலுவலராக இருந்த தங்கவேல், ஹ்யூகோ வுட்டைப் பற்றி எனக்குச் சொன்ன தகவலின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் நான் உலாந்தி பள்ளத்தாக்கிற்குச் சென்றேன்.

ஹ்யூகோ வுட் நினைவிடத்தையும், அவர் வாழ்ந்த வீட்டையும் பார்த்துப் படமெடுத்துக்கொண்டு திரும்பினேன். ஹ்யூகோ வுட்டைப் பற்றி மேலே சொல்லப்பட்ட செய்தி எதற்குமே தமிழக வனத் துறையில் சான்றுகளோ, அவருடைய புகைப்படமோ இல்லை.

டாப் ஸ்லிப் வனத் துறை அலுவலகத்திலிருந்த அலுவலர்களிடம் விசாரித்ததில், “பொள்ளாச்சியிலுள்ள இந்திரா காந்தி வன உயிரியல் காப்பக இயக்குநர் அலுவலகத்தில் ஹ்யூகோ வுட் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம்” என்று சொன்னார்கள்.

மறுநாள் அங்கு சென்று மாவட்ட வன அலுவலர் அசோகனை நேரில் சந்தித்துப் பேசியபோது, “ஹுயூகோ வுட் பற்றி எந்த ஆவணமும் எங்கள் அலுவலகத்தில் இல்லை. சேலம் மண்டல வனப் பாதுகாவலராக இருக்கும் கணேசன்தான் வுட்டைப் பற்றிச் சில தகவல்களை ஒரு நூலில் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில்தான் 1916-17ஆம் ஆண்டுகளில் வுட் இங்கே பணியாற்றியுள்ளார் என்று நாங்களும் எழுதியுள்ளோம், எதற்கும் நீங்கள் கணேசனை விசாரித்துப் பாருங்கள்” என்றார்.

சில நாளுக்குப் பிறகு, கணேசனைச் சேலத்தில் சந்தித்தபோது, “டாப் ஸ்லிப் மலைப் பகுதியை மறு சீரமைப்பு செய்ய வுட் அரும்பாடு பட்டுள்ளார். ஆனால், அவரைப் பற்றிய எந்த ஆவணமுமே நம்மிடம் இல்லை என்பது வேதனையானது” என்றார்.

“1933இல் ஹ்யூகோ வுட்டின் உடலை எடுத்துக்கொண்டு வந்து உலாந்தி பள்ளத்தாக்கில் அடக்கம் செய்தபோது ஏழு வயதுச் சிறுமியாக இருந்த மெக்கரீன் என்ற கோவை மாவட்ட வன அலுவலரின் மகள் கடந்த 2004ஆம் ஆண்டு, தனது 83ஆவது வயதில் இந்தியாவுக்கு வந்திருந்தார். ஹ்யூகோ வுட்டின் கல்லறையைப் பார்த்துவிட்டு, அவரது உடலடக்கம் நடந்த அன்று நிகழ்ந்த சில நினைவுகளை அங்கிருந்த தமிழக வனத் துறை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

அவரிடம் பேசியபோதும், இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியிலிருந்த பழங்குடி மக்களிடம் பேசியபோதும் கிடைத்த செய்திகளின்படி ஹ்யூகோ வுட் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் காசநோய் நோய் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிகிறது. இதைத் தவிர அவர் எழுதிய ஒரு புத்தகத்தை நான் படித்ததாகவும் நினைவு உள்ளது. அந்நூலின் பின் பக்கத்தில் விஞ்சின் மூலம் மரங்களைத் தூக்கிக்கொண்டிருக்கும் சில ஆட்களுக்கு முன்பாக ஹ்யூகோ வுட் உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு படமும் வெளியாகியிருந்தது. அந்த நூலின் பெயர்கூட இப்போது எனக்கு நினைவுக்கு வரவில்லை. தற்போது, அமராவதி வனச்சரக அலுவலராக உள்ள தங்கராஜா பன்னீர்செல்வம் என்பவர்தான் ஹ்யூகோ வுட் பற்றிய தகவல்களை வைத்துள்ளார். நீங்கள் அவரைத் தொடர்புகொள்ளுங்கள்” என்றார்.

இதற்கிடையில், சில வனத் துறை அலுவலர்கள் கோவையிலுள்ள வனத் துறை காஸ் அருங்காட்சியகம், வனத் துறை அலுவலர்கள் பயிற்சி நடுவம், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி போன்ற இடங்களிலும் வுட் பற்றிய தகவல்கள் இருக்கும் என்று பலரும் சொன்னதன் பேரில் நான் அங்கெல்லாம் சென்று பார்த்தேன். எங்குமே ஹ்யூகோ வுட் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை.

கோவை மண்டல வனக் கோட்ட அலுவலகம், நீலகிரி மாவட்ட வன அலுவலகம், சென்னை முதன்மை வனப் பாதுகாவலர் அலுவலகம் எனப் பல இடங்களுக்குத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹ்யூகோ வுட் பற்றிய விவரம் ஏதும் உள்ளதா என மனு அனுப்பியதற்கு கோவை மண்டல வன அலுவலகத்தை தவிர வேறு எல்லோருமே அந்த மனுவைப் பொள்ளாச்சியில் உள்ள இந்திரா காந்தி சரணாலயத்துக்கே அனுப்பி எனக்கு பதில் கொடுக்குமாறு கடிதம் எழுதிவிட்டனர்.

“நீங்கள் கேட்கும் தகவல் பத்து ஆண்டுகளுக்கு முந்தையது. எனவே தகவலறியும் உரிமைச் சட்டம் 2005, விதிகளின்படி உங்களுக்கு தகவல் தர இயலாது” என்று கோவை மண்டல வனக் கோட்ட அலுவலகத்திலிருந்து பதில் அனுப்பினார்கள்.

அமராவதி வனச்சரகராக இருந்த தங்கராஜா பன்னீர்செல்வத்தின் செல்பேசி எண்ணைக் கண்டுபிடித்து அவருடன் பேசினேன். “சேத்துமடையிலிருந்து டாப் ஸ்லிப் பகுதிக்கு இப்போது நாம் செல்லும் பாதை அப்போது ஹ்யூகோ வுட்டால் குதிரைச் சவாரிக்காக அமைக்கப்பட்ட பாதை. அதன் வழியாகத்தான் ஹ்யூகோ வுட்டின் உடலும், டாப் ஸ்லிப் மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஹ்யூகோ வுட்டின் உடலை எடுத்துக்கொண்டு வரும்போது கிட்டத்தட்ட 12 மோட்டார் வாகனங்களில் பிரிட்டிஷ் அரசின் பல்துறை அதிகாரிகளும் டாப் ஸ்லிப் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது, மாவட்ட ஆட்சியர், காவல் துறை, இராணுவம், நீதித் துறை அதிகாரிகள் எனப் பலர் ஹ்யூகோ வுட் உடலைச் சுமந்து சென்ற ஒரு சிறிய லாரியைப் பின் தொடர்ந்து கார்களில் வந்துள்ளனர். இந்த வண்டிகள்தான் முதன் முறையாக டாப் ஸ்லிப் மலை மீது ஏறிய வாகனங்கள்” என்று அவர் தெரிவித்தார்.

“நானும் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழக வனத் துறையில் வுட்டைப் பற்றிய ஆவணங்கள் கிடைக்குமா என்ற ஆவலில் பல இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை” என்றவர், “லண்டனில் உள்ள கிவ் கார்டன் என்ற இடத்திலுள்ள தாவரவியல் ஆய்வு நடுவத்தில் மட்டும் நான் இன்னும் ஹ்யூகோ பற்றிய ஆவணங்களைத் தேடிப் பார்க்கவில்லை” என்றார்.

என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடன், வுட்டைப் பற்றி நான் கேட்டறிந்த செய்திகளையும், அவரது நினைவிடத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களையும் சேர்த்து, கிவ் கார்டனின் முகவரிக்கு மின்னஞ்சல் ([email protected]) அனுப்பினேன்.

உலக அளவிலான தாவரவியல் ஆய்வுகளை ஆவணப்படுத்திவரும் அந்த நிறுவனத்திலிருந்து எனக்குப் பத்து நாட்களில் பதில்வந்தது.

அதில், “எங்களிடம் வுட் பற்றிய தகவல்கள் இல்லை. ஆனால், இங்கிலாந்து தேசிய ஆவணக் காப்பகத்தில் இவரைப் பற்றிய செய்திகள் கிடைக்கலாம்...” என்று பதில் எழுதியதுடன் அதன் முகவரியும் கொடுத்திருந்தனர்.

அடுத்து, இங்கிலாந்து தேசிய ஆவணக் காப்பகத்துக்கும் கடிதம் ([email protected]) எழுதினேன். இரண்டு நாளில் என் கடிதத்திற்குப் பதிலளித்திருந்த அந்நிறுவனத்தின் அதிகாரிகள் “எங்களிடம் உள்ள ஆவணங்களில் வுட் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆசியன் பசிபிக் அண்டு ஆப்பிரிக்கன் கவுன்சில் என்ற நிறுவனத்தில்தான் இங்கிலாந்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற ஆங்கிலேயர்களின் பட்டியல் உள்ளது. அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்...” என்று அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியுடன் எனக்குப் பதில் அனுப்பினர்.

அவர்கள் தந்த [email protected] என்ற முகவரிக்கு என் கடிதத்தை உடனே அனுப்பினேன். ஒரே வாரத்தில், “நீங்கள் கேட்டிருந்த வுட் பற்றிய எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை. ஆனால், கட்டாயம் இந்தியாவில் வசித்த ஆங்கிலேயர்களைப் பற்றிய விவரங்கள் மும்பை பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சென்னை பிரிட்டிஷ் நூலகத்தில் இருக்கும். நீங்கள் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்...” என்று அந்த இரு நிறுவனங்களின் முகவரிகளையும் தெரிவித்திருந்தனர்.

எனக்குப் பதில் அனுப்பிய ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரிகளுமே, உங்களுக்கு ஹ்யூகோ வுட் பற்றிய எந்தச் செய்தி கிடைத்தாலும், அதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தனர்.

மும்பை பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் சென்னை பிரிட்டிஷ் நூலகத்திற்கும் கடிதம் அனுப்பினேன். மறு நாளே மும்பை பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்து பதில் வந்தது.

(ஹ்யூகோ வுட்டின் அடிச்சுவட்டைத் தேடும் பயணம் தொடரும்…)

மீண்ட சொர்க்கம்

நாடு வீழ்ந்ததால் காடும் அழிந்தது!

ஆனைமலையின் மரங்கள் வீழ்ந்த கதை!

காடுகளைக் காக்க ஹ்யூகோ வுட் சொன்ன வழி!

லட்சக்கணக்கான தேக்கு மரங்கள் வந்தது எப்படி?

செவ்வாய், 30 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon